/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.4.5 கோடியில் நடந்த துார்வாரும் பணி தரமில்லாததால் கரைகள் சேதம் ஓடைப்பட்டி பொன்ராஜ் கவுடர் கண்மாய் விவசாயிகள் புலம்பல்
/
ரூ.4.5 கோடியில் நடந்த துார்வாரும் பணி தரமில்லாததால் கரைகள் சேதம் ஓடைப்பட்டி பொன்ராஜ் கவுடர் கண்மாய் விவசாயிகள் புலம்பல்
ரூ.4.5 கோடியில் நடந்த துார்வாரும் பணி தரமில்லாததால் கரைகள் சேதம் ஓடைப்பட்டி பொன்ராஜ் கவுடர் கண்மாய் விவசாயிகள் புலம்பல்
ரூ.4.5 கோடியில் நடந்த துார்வாரும் பணி தரமில்லாததால் கரைகள் சேதம் ஓடைப்பட்டி பொன்ராஜ் கவுடர் கண்மாய் விவசாயிகள் புலம்பல்
ADDED : பிப் 01, 2024 05:12 AM

-சின்னமனுார் : ரூ. 4.5 கோடியில் நடந்த கண்மாய் துார்வாரும் பணி தரமாக இல்லாததால் கரைகள் சேதமடைந்து மழைநீர் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
சின்னமனுாரிலிருந்து ஹைவேலிஸ் செல்லும் ரோட்டில் மலையடிவாரத்தில் உள்ளது ஓடைப்பட்டி பேரூராட்சி. இவ்வூர் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். திராட்சை, வாழை, காய்கறி பயிர்கள் அதிகம் சாகுபடியாகிறது. இப் பகுதி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தவும், கோடையில் கால்நடைகளின் தாகம் தணிக்கவும், பாசன வசதி தேவைகளை கருதி தண்ணீரை தேக்கி வைக்க ஓடைப்பட்டியில் பொன் ராஜ்கவுடர் கண்மாய் உள்ளது. 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய்க்கு சண்முகா நதி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் இன்று வரை நிறைவேறவில்லை.
மழை நீர் தேங்கும் இக் கண்மாய் 2020 -2021 ல் மூலதன நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.5 கோடியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இப் பணியின் - போது கண்மாயில் இருந்த செம்மண் பல நுாறு லாரிகளில் மண் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்படியே அமுங்கி போனது.
பல நுாறுடன் மண் கொள்ளை போன இக் கண்மாயில் தூர் வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர். தூர் வாரும் பணிகளின் போது அமைக்கப்பட்ட கரை, சமீபத்தில் பெய்த மழையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்மாய் நிரம்பும் பட்சத்தில் கரை உடையும் அபாயம் உள்ளது.
அத்துடன் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகளை கிழக்கு பக்க கரை, வடக்கு பக்க வெளிப்புற கரையில் பதிக்கவில்லை. தெற்கு பகுதியில் எந்த சீரமைப்பு வேலையும் செய்யவில்லை.
அப் பகுதியில் ஒட்டி தனியார் தோட்டம் உள்ளது என்றாலும் கண்மாய் இடத்தை அளவீடு செய்து தடுப்பு சுவர் அல்லது கரை அமைத்திருக்க வேண்டும். மேலும் கண்மாய் நிரம்பும் போது, தண்ணீர் வெளியேறி செல்ல முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. அதை சரி செய்ய வில்லை.
மொத்தத்தில் கண்மாயில் மண்ணை அள்ளினர், இரண்டு பகுதிகளில் சிமெனட் சிலாப் பதித்துள்ளார்கள்.
ரூ.4.5 கோடி மதிப்பீட்டிற்கு மேற்கொண்ட பணி எந்த அளவு சரியானது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தான் விளக்க வேண்டும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
தரமில்லாத பணியால் கரைகள் சேதம்
பெரியசாமி, திராட்சை விவசாயி, ஓடைப்பட்டி : கண்மாய் தூர்வாரும் பணியின் போது கரைகள் அமைத்தது தரமாக இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் கரைகள் சேதமடைந்து தண்ணீர் தோட்டத்திற்குள் வந்து விட்டது. இந்த கண்மாய் நிரம்பினால் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தோட்ட கிணறுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கால்நடைகளுக்கு குடிநீர் தேவை நிவர்த்தியாகும். சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. அணையின் நீரை கொண்டு வர வேண்டும்.
கண்துடைப்பாய் நடந்த பணி
மணிகண்டன், ஓடைப்பட்டி : கண்மாய் தூர்வாரும் பணி முழுக்க முழுக்க சரியில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரும் பணி மேற்கொள்ளவில்லை. கண்மாய் பரப்பளளவில் மூன்றில் 2 பங்கு மட்டும் தூர்வாரி உள்ளார்கள். ஒரு பகுதி கண்டு கொள்ளவில்லை. கரைகள் சரிவர அமைக்கவில்லை . கிழக்கு பக்கம் சிமென்ட் சிலாப் பதிக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு பயன்படும் இந்த கண்மாய் பராமரிப்பு ஒரு கண் துடைப்பு பணியாக நடந்து முடிந்திருக்கிறது.
அதிக மழையால் சேதம்
தனுஷ்கோடி, பேரூராட்சி தலைவர் : பராமரிப்பு பணிகள் முறையாக நடந்துள்ளது. மழை அதிகமாக பெய்ததால் கரையில் கசிவு ஏற்படுவது இயல்பானது தான். கிழக்கு பக்கம் ரோடு என்பதால் சிலாப் பதிக்கவில்லை. சண்முகா நதி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.