/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் கற்றலை கண்காணிப்பதில்...சிரமம் ; நிர்வாக சிக்கலால் நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதில் இழுபறி
/
மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் கற்றலை கண்காணிப்பதில்...சிரமம் ; நிர்வாக சிக்கலால் நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதில் இழுபறி
மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் கற்றலை கண்காணிப்பதில்...சிரமம் ; நிர்வாக சிக்கலால் நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதில் இழுபறி
மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் கற்றலை கண்காணிப்பதில்...சிரமம் ; நிர்வாக சிக்கலால் நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதில் இழுபறி
ADDED : அக் 02, 2025 04:28 AM

தேனி : மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக சிக்கல்களால் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன்கள் குறித்த தரவுகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற முடியாத நிலை நிலவுவதாக கல்வித்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அல்லிநகரம், உத்தமபாளையம், சில்வார்பட்டி என மூன்று இடங்களில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ், ஆங்கில வழியில் வகுப்புகள் நடக்கின்றன. இந்த பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் நிரந்தர ஆசிரியர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பிற பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் இங்கு பணிபுரிகின்றனர். இவர்களில் சிலர் ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். தற்போது 3 பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 50 இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் பணிபுரிகின்றனர்.
நிர்வாக சிக்கல்: ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மேல்நிலைக் கல்வி இயக்குனரகம் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 5ம் வகுப்பு வரை நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதில் நிர்வாக சிக்கல் நீடிக்கிறது. மேலும் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் சேர்ந்தால் சீனியாரிட்டி பாதிக்கப்படும் என்பதால் பலரும் முன்வருவது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப்பள்ளியில் சேர்க்க, அல்லது ஒரே வளாகத்தில் புதிய நிர்வாகம் அமைக்க வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டது. ஆனால், தேனி மாவட்டத்தில் அந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
பாதிக்கப்படும் மாணவர்கள்: இதனால் இந்த 3 பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பற்றி 'எமிஸ்'ல் பதிவேற்ற முடிவதில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் தொடர்பான தரவுகள் இல்லாததால் அவர்களை கண்காணிப்பதில் கல்வித்துறைக்கு சிக்கல் நீடித்து வருகிறது என, கல்வித்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.