/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்ன பொட்டிபுரத்திற்கு பஸ் வசதி இன்றி சிரமம்
/
சின்ன பொட்டிபுரத்திற்கு பஸ் வசதி இன்றி சிரமம்
ADDED : ஜூலை 27, 2025 12:32 AM
போடி: போடியில் இருந்து சின்ன பொட்டிபுரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சின்னமனூர் ஒன்றியம், பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன பொட்டிபுரம். போடியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். போடியில் இருந்து இக் கிராமத்திற்கு செல்ல ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை. இங்கு ஆரம்ப பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, மேல்நிலைப் பள்ளியில் படிக்க 2 கி.மீ., தூரம் உள்ள ராசிங்காபுரம், மூன்று கி.மீ., தூரம் உள்ள சிலமலைக்கு நடந்தும், சைக்கிள், ஆட்டோவில் செல்ல வேண்டும். இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் பெற ராசிங்காபுரமும், முடியாத நிலையில் 8 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு செல்ல வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு போடியில் இருந்து சின்னபொட்டிபுரம் வழியாக சின்னமனூர், உத்தமபாளையத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின் தற்போது வரை இந்த வழியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். காலை, மாலையில் பஸ்கள் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. போடியிலிருந்து சின்ன பொட்டிபுரத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.