செயலிழந்த எரியூட்டும் தகன மேடை: பொதுமக்கள் பாதிப்பு
செயலிழந்த எரியூட்டும் தகன மேடை: பொதுமக்கள் பாதிப்பு
UPDATED : அக் 12, 2026 05:08 PM
ADDED : அக் 12, 2026 05:06 PM

மூணாறு: பராமரிப்பு இன்றி எரிவாயு மயானம் பழுதடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மூணாறில் சைலன்ட்வாலி ரோட்டில் தேவிகுளம் ஒன்றியம் சார்பில் ரூ.65 லட்சம் செலவில் சாந்தி வனம் எனும் எரிவாயு தகனமேடை 2009ல் பயன்பாட்டுக்கு வந்தது. மூணாறு ஊராட்சி இதனை பராமரிக்கிறது. இத் தகன மேடையினை மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.
மயானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் 15 நாட்களுக்கும் மேலாக செயல்படவில்லை. அதனால்
மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட்டில் கடந்த வாரம் இறந்தவரின் உடலை அடிமாலியில் இருந்து இயந்திரம் கொண்டு வரப்பட்டு ரூ. 15 ஆயிரம் செலவழித்து உடல் எரியூட்டப்பட்டது. இதே நிலைமை பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது.
எரிவாயு மயானத்தில் உடலை எரியூட்ட ரூ. 3 ஆயிரம் கட்டணம் வசூலித்த நிலையில், அதிக தொகை கொடுத்து உடலை தகனம் செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் மோகன்குமார் கூறியதாவது: தேவிகுளம் ஒன்றியத்தில் நான் துணைத் தலைவராக இருந்தபோது மயானம் பயன்பாட்டுக்கு வந்தது. ஆண்டுதோறும் மயானம் பராமரிக்க வேண்டும் என்றபோதும், அதனை மூணாறு ஊராட்சி கடைபிடிப்பது இல்லை. இது குறித்து சமீபத்தில் ஊராட்சி தலைவரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு ஜெனரேட்டர் பேட்டரிகள் பழுதடைந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
