/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரு ஆண்டில் தனியார் துறையில் 923 பேருக்கு பணி நியமனம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
/
ஒரு ஆண்டில் தனியார் துறையில் 923 பேருக்கு பணி நியமனம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
ஒரு ஆண்டில் தனியார் துறையில் 923 பேருக்கு பணி நியமனம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
ஒரு ஆண்டில் தனியார் துறையில் 923 பேருக்கு பணி நியமனம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
ADDED : ஜூன் 27, 2025 05:18 AM

தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2024- 2025ல் படித்த இளைஞர்கள் 923 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராமபிரபா தெரிவித்தார்.
சில அரசுத்துறைகளில் நேர்காணல் மூலம் நடைபெறும் நேரடி பணி நியமனங்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையில் உரியவர்களை பரிந்துரை செய்தல், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துதல், படித்த இளைஞர்கள்,பெண்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தருதல் பணியில் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பணிகள் பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமபிரபா அன்புடன் அதிகாரி பகுதிக்காக கூறியதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணிகள் பற்றி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் சில அரசுத்துறைகளில் மேற்கொள்ளப்படும் நேர்காணல் தேர்வுகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசின் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது தவிர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஒருங்கிணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் சுயதொழில் முனைவோராக மாற்ற வழிகாட்டுகிறோம். இதுதவிர வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவு செய்வது
பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள், அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அலுவலகத்திற்கு நேரில் வர முடியாதவர்கள் www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் புதுப்பித்தல் பணிகளையும் செய்து கொள்ளலாம். அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வந்த பின் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எந்தெந்த நேர்காணல் பணிகளுக்கு பரிந்துரை செய்கிறீர்கள்
உரிய கல்வித்தகுதி அடிப்படை, பதிவு மூப்பு வரிசைப்படி கூட்டுறவுத்துறையில் நடைபெறும் தேர்வுகள், போக்குவரத்து துறையில் டிரைவர் கம் கண்டக்டர் பணி, உள்ளிட்ட சில துறைகளின் பணிகளுக்கு பரிந்துரை செய்கிறோம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றோம். அது தவிர சில கல்வி நிறுவனங்களிலும் நேரடியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறோம்.
கடந்த ஆண்டு அலுவலகத்தில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 232 பேர், இரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 691 பேர் என மொத்தம் 923 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 58,522 பேர் பதிவு செய்து உள்ளனர். மாவட்டத்தை சேர்ந்த 123 வேலை அளிக்கும் நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. பணியாளர்களை தேர்வு செய்யவும் தனியார் துறைகள் இணையத்தில் பதிவு செய்யலாம்.முகாமில் பங்கேற்க கல்வித்தகுதி
முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டபடிப்பு, தொழிற்படிப்புகள் படித்தவர்கள், டிப்ளமோ, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க வருபவர்கள் ஆதார் நகல், பிற சான்றிதழ்கள் நகல், சுயவிபரக்குறிப்புடன் பங்கேற்க வேண்டும்.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பற்றி
மாவட்ட அலுவலகத்தில் செயல்படும் நுாலகத்தில் அனைத்து அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் உள்ளன. மேலும், இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரித்தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகளும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனி பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் வருகிற ஜூன் 24, ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பயிற்சி பெற்றோர் தேர்ச்சி பெற்றுள்ளனரா
கடந்தாண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 27 பேர் டி.என்.பி.எஸ்.சி., சீருடைப்பணியாளர் தேர்வு என பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது
உதவித்தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் என கல்வித்தகுதிக்கேற்ப ஓராண்டு நிறைவு செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.27.05 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.