/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொட்டிப் பாலம் பாதையில் பள்ளம் ஏற்படுத்தியதால் -விவசாயிகள் சிரமம்
/
தொட்டிப் பாலம் பாதையில் பள்ளம் ஏற்படுத்தியதால் -விவசாயிகள் சிரமம்
தொட்டிப் பாலம் பாதையில் பள்ளம் ஏற்படுத்தியதால் -விவசாயிகள் சிரமம்
தொட்டிப் பாலம் பாதையில் பள்ளம் ஏற்படுத்தியதால் -விவசாயிகள் சிரமம்
ADDED : பிப் 18, 2024 01:35 AM

கூடலுார்: தொட்டிப் பாலத்திற்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பள்ளம் தோண்டி தடுக்கப்பட்டுள்ளதால் விளைபொருட்களை கொண்டுவர முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
18ம் கால்வாயில் திறக்கப்படும் நீர் தம்மணம்பட்டி அருகே உள்ள தொட்டிப் பாலம் வழியாக வெளியேறும். சமீபத்தில் இப்பாலத்தின் துவக்க பகுதியில் கரைப்பகுதி சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. அப்பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி நீர்வளத் துறையினர் சீரமைத்தனர். தொட்டிப் பாலத்தை பார்ப்பதற்கும் அதில் குளித்து மகிழ்வதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களால் கரைப்பகுதி சேதம் அடைந்து உடைந்ததாக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக கழுதைமேடு ரோடு பிரிவின் துவக்கப் பகுதியில் தொட்டிப் பாலம் பாதையில் பள்ளம் தோண்டி வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தொட்டிப் பாலத்திற்கு அருகில் மா, பலா, இலவ மரம் உள்ளிட்ட விவசாயம் செய்து வரும் விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு வர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விவசாயிகள் கூறும் போது: தொட்டிப் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க இப்பாலத்தை ஒட்டி தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒரு கி.மீ., தூரத்தில் பாதையை அடைத்ததால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வர முடியவில்லை. கடந்த ஆண்டு இதே பிரச்னை இருந்ததால் தொட்டிப் பாலத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அடிக்கடி சேதமடையும் தொட்டிப் பாலத்தின் கரைப் பகுதியை கான்கிரீட் மூலம் நிரந்தரமாக சீரமைக்கப்பட்டால் இது போன்ற பிரச்னை ஏற்படாது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.