/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நல்லடிச்சேரி கண்மாயில் நீர் தேங்காததால் தரிசாகும் விளைநிலங்கள் வாழ்வாதரம் இழந்த விவசாயிள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை
/
நல்லடிச்சேரி கண்மாயில் நீர் தேங்காததால் தரிசாகும் விளைநிலங்கள் வாழ்வாதரம் இழந்த விவசாயிள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை
நல்லடிச்சேரி கண்மாயில் நீர் தேங்காததால் தரிசாகும் விளைநிலங்கள் வாழ்வாதரம் இழந்த விவசாயிள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை
நல்லடிச்சேரி கண்மாயில் நீர் தேங்காததால் தரிசாகும் விளைநிலங்கள் வாழ்வாதரம் இழந்த விவசாயிள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை
ADDED : ஆக 14, 2025 02:49 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், பாலசமுத்திரம் நல்லடிச்சேரி கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி விட்டன.வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடி வருகின்றனர்.
150 ஏக்கர் நீர்த்தேக்கப்பரப்பு கொண்ட இக்கண்மாய்க்கு வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது. துரைச்சாமிபுரத்தில் தடுப்பணை அமைத்து அங்கிருந்து ஆத்தாங்கரைப்பட்டி, அடைக்கம்பட்டி, எம்.சுப்புலாபுரம் வழியாக வரும் கால்வாய் மூலம் வரும் நீர் கண்மாய்க்கு செல்கிறது. மூல வைகை ஆற்றில் நீர் வரும் காலங்களில் கால்வாய் வழியாக செல்லும் நீரை கண்மாயில் தேக்கி விவசாயம் மேற்கொண்டு வந்தனர். மூல வைகை ஆற்றில் நீர் வரத்து இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் நிரம்ப வில்லை. இதனால் கண்மாய் மூலம் நேரடி பாசனத்தில் மூன்று போகம் விளைந்த நிலங்கள் தற்போது ஒரு போகத்திற்கே திண்டாடுகிறது. கண்மாயில் நீர் தேங்காததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதித்துள்ளது. இதனால் இறவை பாசன நிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பராமரிப்பு இன்றி மறைந்த 2 கி.மீ.,துார கால்வாய் : கனகராஜ், பாலசமுத்திரம்: வருஷநாடு மூல வைகை ஆற்றில் ஒரு ஆண்டில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே நீர் வரத்து தொடரும். இந்த சமயத்தில் கிடைக்கும் நீரை மட்டுமே கண்மாயில் தேக்க முடியும். கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் பாலசமுத்திரம், முத்துச்சங்கிலிபட்டி, ரோசனப்பட்டி, நல்லமுடிபட்டி, பிராதுக்காரன்பட்டி, கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பலன் பெறும். கடந்த பல ஆண்டுகளாக கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கவில்லை.
குறைவான அளவில் தேங்கும் நீர் சில மாதங்களில் வற்றி விடுவதால் விவசாயத்தை முழு அளவில் செய்ய முடியவில்லை. பழனித்தேவன்பட்டி பிரிவில் இருந்து கண்மாய் வரை 2 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் மூடிக்கிடக்கிறது. மழைக்காலம் துவங்கும் முன் ஒவ்வொரு ஆண்டும் இதனை சரி செய்யும் நடவடிக்கையை நீர்வளத்துறை மேற்கொள்வதில்லை. விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த செலவில் அவ்வப்போது சரி செய்கின்றனர்.
தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் சரி செய்ய விவசாயிகளிடம் நிதி ஆதாரமில்லை. விவசாயம் பாதிப்பதால் அதில் தொடர்புடைய கால்நடை வளர்ப்பும் பாதிப்படைகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட கண்மாய், நீர்வரத்து கால்வாயை தொடர்ந்து பராமரித்து நீர்த்தேக்க வேண்டும்.
குப்பை கொட்டி கால்வாய் மூடிய அவலம் துரைராஜ், கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர், பாலசமுத்திரம்: மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக வரும் நீரை 12 நாட்கள் முறை வைத்து ஒரு கண்மாய்க்கு நான்கு நாட்கள் வீதம் பாலசமுத்திரம், ரங்கசமுத்திரம், மரிக்குண்டு கண்மாய்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. பாலசமுத்திரம் கண்மாக்கு வரும் கால்வாய் பராமரிப்பில்லாததால் முழு அளவில் நீர் சென்று சேர்வதில்லை. பழனித்தேவன்பட்டி அருகே வாய்க்கால் நீரை திருப்பி விடும் இடத்தில் இருந்து பாலசமுத்திரம் கண்மாய்க்கு வரும் கால்வாய் மேடாக உள்ளது. இதனால் நீரின் வேகம் தடைபடுகிறது. எம்.சுப்புலாபுரம் அருகே வாய்க்கால் புதர் மண்டி கிடக்கிறது.
இப்பகுதியில் குப்பையை கொட்டி வாய்க்காலை பல இடங்களில் மூடிவிட்டனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. பழனித்தேவன்பட்டியில் இருந்து கால்வாயில் இருபுறமும் தடுப்புச் சுவர் அல்லது சிமென்ட் வாய்க்கால் அமைத்து கண்மாய்க்கு முழு அளவில் நீரை கொண்டு செல்ல வேண்டும். வளமான மண் இருந்தும், கிடைக்கும் நீரை முறையாக பயன்படுத்த முடியாததால் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தி கண்மாய் பாசனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.