/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் தட்டுப்பாட்டால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் முத்து.ெரங்காபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
/
குடிநீர் தட்டுப்பாட்டால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் முத்து.ெரங்காபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் முத்து.ெரங்காபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் முத்து.ெரங்காபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : மார் 05, 2024 04:13 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றி யம், தேக்கம்பட்டி ஊராட்சி முத்துரெங்காபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம், முத்துரங்காபுரம், அடைக்கம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய குக்கிராமங்களில் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக் கிராமங்களிலும் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் போர்வெல் நீரை வினியோகித்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர். வடிகால் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைகின்றனர்.
ஊராட்சி பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னை குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு
ராமானுஜம், முத்துரெங்காபுரம்: ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறைதான் கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். அதுவும் குறைந்த நேரமே வினியோகம் இருப்பதால் பலருக்கும் கிடைப்பதில்லை. நிலத்தடி நீரான உப்பு நீரை மட்டுமே அனைத்து தேவைக்கும் பயன்படுத்த வேண்டி உள்ளது.
குடியிருப்புகளில் கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல இடங்களில் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. முத்துரெங்காபுரத்தில் இருந்து எரதிமக்காள்பட்டி செல்லும் ரோடு பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த ரோட்டை புதுப்பிக்க பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
மூல வைகை ஆற்றில் துரைச்சாமிபுரம் தடுப்பணையிலிருந்து முத்துரெங்கபுரம் வழியாகச் செல்லும் கால்வாய் நீரை இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்த முடியவில்லை. இந்த நீரை கண்மாயில் தேக்குவதற்கான நடவடிக்கை வேண்டும்.
விவசாயம் மட்டுமே பிரதானமாக உள்ள இப்பகுதியில் உள்ள இரு ஊரணிகளை சுத்தம் செய்து ஆழப்படுத்தி ஆண்டு முழுவதும் மழை நீர் தேங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுக்கழிப்பிட வசதி இல்லை
குருசாமி, முத்துரெங்காபுரம்: கிராமத்தில் ஆண்கள், பெண்களுக்கான பொதுக்கழிப்பறை வசதி இல்லை. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது.
சமுதாயக்கூடம் இல்லாததால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். கிராமத்திற்கு தினமும் அதிகாலை 5:15, மதியம் 1:30, இரவு 7:30 மணிக்கு மட்டுமே டவுன் பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. முத்துரெங்காபுரம் வழியாக கூடுதல் நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. சுடுகாடு வளாகம் புதர் மண்டி உள்ளது. இப்பகுதியில் தண்ணீர் வசதி, தெருவிளக்கு, ரோடு, சுற்றுச்சுவர் வசதி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த குழாய்கள் சீரமைப்பு
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியில் ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதம் அடைவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. சேதமடைந்த குழாய்கள் சரி செய்து மீண்டும் வினியோகம் செய்ய சில நாட்கள் தாமதம் ஆகிறது.
ஊராட்சியின் நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. கால்வாய் நீரை கண்மாயில் தேக்குவது குறித்து கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

