ADDED : ஜூன் 26, 2025 01:49 AM
பெரியகுளம்: ''கிராமப்புற தொழில் முனைவோர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவதினால் மேன்மை அடையலாம்.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவியுடன், சமூக அறிவியல் துறையின் சார்பில், கிராமப்புற தொழில் முனைவோருக்கான காளான் உற்பத்தி, முருங்கை மற்றும் பழ மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சியின் துவக்க விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார். சமூக அறிவியல் துறை தலைவர் ராஜதுரை, உதவிப் பேராசிரியர் ஈஸ்வரி முன்னிலை வகித்தனர். கலெக்டர் பேசுகையில், ''தேனி மாவட்டம் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு வருகிறது. விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இது போன்ற பயிற்சிகள் சுயதொழில், வருமானம் ஈட்டுதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான நடைமுறை பாதையை வழங்குகின்றன. கிராமப்புற தொழில் முனைவோருடன் அறிவியலை இணைப்பதற்கு முன் மாதிரியாக பயிற்சி உள்ளது., என்றார். தொழில் முனைவோர்கள் பலர் பங்கேற்றனர். புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வசந்தன் நன்றி தெரிவித்தார்.