/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட விவசாயிகள் ... எதிர்பார்ப்பு
/
18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட விவசாயிகள் ... எதிர்பார்ப்பு
18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட விவசாயிகள் ... எதிர்பார்ப்பு
18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட விவசாயிகள் ... எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 13, 2025 06:55 AM
ADDED : ஆக 13, 2025 02:21 AM

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து போடி வரையுள்ள 18ம் கால்வாய் 47 கி.மீ., நீளம் கொண்டதாகும். இக் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நிலப்பரப்பில் நேரடி பாசனம் உள்ளது. இது தவிர கால்வாயை ஒட்டியுள்ள 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். 2008ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு 2010ல் பயன்பாட்டிற்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் இருந்து இக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 44 கன்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதுடன், 4615 ஏக்கர் நேரடி பாசனமும் நடைபெறும்.
2023ல் அணை நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த போதிலும் தாமதமாக டிசம்பர் 20ல் திறக்கப்பட்டது. அதேபோல் 2024லும் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தது. அப்போதும் டிசம்பர் 21ல் தாமதமாக திறக்கப்பட்டது. தாமதமாக திறந்தது மட்டுமின்றி தலை மதகு மற்றும் தொட்டிப் பாலம் பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது . மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் கண்மாய்கள் முழுமையாக நிரம்பவில்லை. மேலும் கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 ஆம் கால்வாயை நம்பிருந்த விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்போது அணையின் நீர்மட்டம்132.55 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5294 மில்லியன் கன அடியாகும். பெரியாறு அணை, வைகை அணை ஆகிய இரு அணைகளிலும் மொத்தம் 6250 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தால் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கலாம். தற்போது இரண்டு அணைகளிலும் சேர்த்து 11 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் 18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு மாதங்களுக்கு மேல் தாமதமாக திறக்கப்பட்ட கால்வாயில் இந்த ஆண்டு நீர் இருப்பு திருப்திகரமாக உள்ள நிலையில் முன்கூட்டியே திறக்க வேண்டும். இவ்வாறு திறக்கப்பட்டால் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 29 கண்மாய்களும், போடி தாலுகாவில் உள்ள 15 கண்மாய்களும் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும் போடி வரை கால்வாயில் தண்ணீர் சென்று முழுமையாக பாசன வசதி பெறும்.