கே.வி., பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு எதிர்பார்ப்பு: ஒவ்வொரு வகுப்பிலும் இருபிரிவுகள் துவக்க கோரிக்கை
கே.வி., பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு எதிர்பார்ப்பு: ஒவ்வொரு வகுப்பிலும் இருபிரிவுகள் துவக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2026 02:29 AM

தமிழகத்தில் பல மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. தேனி மாவட்டம் உதயமாகி 27 ஆண்டுகளுக்குப்பின் 2024 டிச.,ல் மாவட்டத்தில் கே.வி., பள்ளி துவங்க மத்திய அரசு அனுமதி கிடைத்தது. அதன்பின் இடத்தேர்வு, இடத்தை கே.வி., பள்ளி நிர்வாகத்திற்கு பதிவு செய்து வழங்குவது, கட்டுமான பணிகள் முடியும் வரை பள்ளியை செயல்படுத்துவது என பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஒரு வழியாக கே.வி., பள்ளி அமைக்க கே.வி., பெருந்திட்ட வளாகத்தில் டி.ஆர்.ஓ., முகாம் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை கே.வி., பள்ளி தற்காலிகமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. குறைந்த கட்டணம், மத்திய அரசு பாடத்திட்டம், இப் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின் உயர்கல்வியில் சேர்வதில் சிரமம் குறைவு, கூடுதல் மொழி புலமை, போட்டித்தேர்வுகளுக்கு எளிதில் தயாராகும் பயிற்சி பெற்றிருப்பார்கள் போன்ற காரணங்களால் கே.வி., பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டினர். விண்ணப்பங்களை அதிகாலை முதல் காத்திருந்து வாங்கி சென்றனர்.
குறிப்பிட்ட வயது முடிந்திருந்தால் தான் வகுப்புகளில் சேர்க்க முடியும் என்ற விதிமுறைகளை விளக்கி கூறி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. சுமார் 1600 விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளனர். விண்ணப்பங்கள் வாங்கி சென்றவர்களில் சுமார் 820 பேர் நேற்று மாலை வரை சமர்ப்பித்திருந்தனர்.
கூடுதல்பிரிவுகள் துவங்க வேண்டும் பெற்றோர்கள் கூறியதாவது: முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவு தான் செயல்படுத்த உள்ளதாக கூறுகின்றனர்.
இதனால் ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்கள் வீதம் 200 மாணவர்களுக்குத்தான் அட்மிஷன் கிடைக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் ஏ, பி என இரு பிரிவுகள் துவங்கினால் கூடுதலாக மாணவர்கள் பயனடைவார்கள்.
மத்திய, மாநில அரசு பணியாளர்களின் குழந்தைகள் மட்டுமின்றி பொதுமக்களுடைய குழந்தைகளையும் அதிகம் சேர்க்க வாய்ப்புகிடைக்கும். இதற்கு பள்ளி நிர்வாகம், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
