ADDED : செப் 20, 2026 03:54 PM
ஆண்டிபட்டி, செப்.21-
வெளிநாடுகளுக்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்து போதிய விலை கிடைப்பதால் ஆண்டிபட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே வெள்ளையத்தேவன்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கும் அதிக பரப்பில் வெண்டைக்காய் சாகுபடி உள்ளது. வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டு முழுவதும் இறவை பாசனத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய் ஏஜென்சிகள் மூலம் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டிபட்டியில் இருந்து சரக்கு வாகனம் மூலம் திருச்சி, சென்னை கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பபடுகிறது.
வெண்டைக்காய் வியாபாரிகள் கூறியதாவது: வெண்டைக்காய் நடவு செய்த 60 நாளில் காய்கள் எடுக்க முடியும். ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் கிடைக்கும். ஆண்டிபட்டியில் இருந்து தினசரி 3 டன் அளவில் வெளிநாடு செல்கிறது. ஏஜென்சிகள் மூலம் கிலோ ரூ.30 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வப்போது விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும். உள்ளூர் மார்க்கெட்டை விட கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்றனர்.
