ADDED : நவ 20, 2024 05:47 AM

பெரியகுளம், : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை பகுதியில் காட்டுமாடு முட்டியதில் விவசாயி நாகேந்திரன் காயமடைந்தார். கூட்டமாக திரியும் அவற்றை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
பெரியகுளம் கீழ வடகரையைச் சேர்ந்த விவசாயி நாகேந்திரன் 50. நேற்று காலையில் கும்பக்கரை பகுதியில் மாந்தோப்பிற்கு வேலைக்கு டூவீலரில் சென்றார். மாந்தோப்பில் இருந்து வெளியேறிய காட்டுமாடு நாகேந்திரனை முட்டியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரின் இடுப்பு, காலில் பலத்தகாயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தோப்புகளில் உலாவுகிறது : தேவதானப்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி கும்பக்கரை, அடுக்கம் ரோடு பகுதிக்கு வந்து விளை நிலங்களுக்குள் புகுந்து மா மரங்களை சேதப்படுத்துகிறது.
தோப்புகளில் வேலை செய்யும் விவசாயிகளை முட்டி காயப்படுத்துகிறது. இதனால் அவர்கள் அச்சத்துடன் உள்ளனர். வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து காட்டுமாடுகளை விளை நிலங்களில் இருந்து விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.