/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தளவாடப்பொருள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அனுமதி மறுப்பு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு உரிமை பறிபோகும் ஆபத்து; விவசாயிகள் கொதிப்பு
/
தளவாடப்பொருள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அனுமதி மறுப்பு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு உரிமை பறிபோகும் ஆபத்து; விவசாயிகள் கொதிப்பு
தளவாடப்பொருள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அனுமதி மறுப்பு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு உரிமை பறிபோகும் ஆபத்து; விவசாயிகள் கொதிப்பு
தளவாடப்பொருள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அனுமதி மறுப்பு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு உரிமை பறிபோகும் ஆபத்து; விவசாயிகள் கொதிப்பு
ADDED : டிச 11, 2024 02:50 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக தளவாடப்பொருட்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் கேரள மாநிலம்வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் அம்மாநில வனத்துறை அனுமதி மறுப்பால் ஒரு வாரத்திற்கு பின் தமிழகம் திரும்பின. இதனால் அணை பராமரிப்பு பணிகளுக்கான உரிமையும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கொதிப்படைந்து உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை நீரை நம்பி தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர்விவசாய நிலங்கள் உள்ளன. லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்துவிட்டதாக 1979ல் முதன் முறையாக கேரள அரசியல்வாதிகள் புகார் கூறினர். இப்புகாருக்கு பின் அணையை பலப்படுத்த வேண்டும் எனவும், பணி முடியும் வரை நீர்மட்டத்தை 136 அடியாக நிலை நிறுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
அணை கேரளாவில் அமைந்திருந்தாலும் அதன் கட்டுப்பாடு தமிழக நீர்வளத்துறையினரிடம் உள்ளது. ரூ.பல கோடியில் அணை தமிழக அரசால் பலப்படுத்தப்பட்டது. இப்பணி முடிந்த பிறகும் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த கேரள தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து தமிழக அரசு, விவசாய சங்கங்கள்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு நிபுணர் குழுக்கள் அணையை ஆய்வு செய்தது. ஆய்வுக்குப் பின் 2006ல் அணை பலமாக உள்ளதாகவும், நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் தீர்ப்பை அமல்படுத்த விடாமல் கேரளா மீண்டும் முரண்டு பிடித்தது.
விவசாயிகள் போராட்டம்
2010 டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதமாக நடந்த போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தியது. 2014ல் உச்ச நீதிமன்றம் இரண்டாவது தீர்ப்பை வெளியிட்டது. அதில் அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தவும், அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்தியபின் மொத்த கொள்ளளவை 152 அடியாக உயர்த்திடவும் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் 2014 அக்டோபரில் பெய்த கனமழையால் நீர்மட்டம்உயர்ந்தபோது கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் நீர்மட்டம் 142 அடியாக நிறுத்தப்பட்டது.
கண்காணிப்பு குழு ஆய்வு
ஒவ்வொரு ஆண்டும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், ஒவ்வொரு மாதமும் மத்திய துணை கண்காணிப்பு குழுவினரும் அணையை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து வந்தனர். இக்குழுவினர் ஆலோசனையின் படி அணை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கலைப்பு
2024 அக்டோபரில் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள்பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அணை பராமரிப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவும், துணை கண்காணிப்பு குழுவும் நவம்பரில் கலைக்கப்பட்டன. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் அணை பராமரிப்பு பணிகள் செய்ய தமிழக நீர்வளத்துறைக்கு முழு அதிகாரம் இருந்தது.
நடக்காத பராமரிப்பு பணி
2024 மே முதல் அணையில் பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்.16 மத்திய துணை கண்காணிப்பு குழு அணைப்பகுதியில் நடத்திய ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணித்தனர்.
அதன்பின் அணையில் பராமரிப்பு பணிகள் அவசியம் என்பதால் நடக்க வேண்டிய 15 பணிகளில் முதற்கட்டமாக ஐந்து பணிகளை மேற்கொள்ள டிச.,4ல் நான்கு யூனிட் எம் சாண்ட் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை 2 லாரிகளில் தமிழக நீர்வளத் துறையினர் கொண்டு சென்றனர்.
கேரள நீர்வளத்துறையின் பரிந்துரை கடிதம் இல்லாமல் லாரிகளை உள்ளே அனுப்ப முடியாது என வனத்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதைக்கண்டித்து குமுளி லோயர்கேம்பில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தமிழக அதிகாரிகள் விளக்கமளித்தும் ஒரு வாரமாக அனுமதியின்றி வள்ளக்கடவு சோதனைசாவடி அருகே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அனுமதி கிடைக்க தாமதமானதால் எம் சாண்டை கீழே கொட்டி விட்டு 2 லாரிகள் தமிழகம் திரும்பின.
புதிய நடைமுறையால்சிக்கல்
அணை பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் இருப்பதால் அங்கு பராமரிப்பு பணி செய்யும் தகவலை மட்டும் கேரள வனத்துறையினரிடம் தெரிவித்து விட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் புதியதாக கேரள நீர்ப்பாசனத் துறையிடம் அனுமதி பெற்ற பின் பணிகள் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கேரள அரசால் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதிலும் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால் அணையின் உரிமை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தடுப்பதில் நியாயம் இல்லை
சுதந்திர அமல்ராஜ், ஓய்வு பெற்ற பெரியாறு அணை செயற்பொறியாளர்: பராமரிப்பு பணி செய்ய முழு அதிகாரம் தமிழக நீர்வளத்துறைக்கு மட்டுமே உள்ளது. அதற்கேற்றார்போல் அனைத்து கண்காணிப்பு குழுவும் பணிகள் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்த போதிலும் தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல தடுப்பதில் நியாயம் இல்லை.
அணை பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் இருப்பதால் தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது கேரள வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.கேரள நீர்ப்பாசனத்துறைக்கு இதற்கான தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது, அனுமதி பெற வேண்டியதில்லை. இதுதான் நான் அங்கு பணிபுரியும் வரை இருந்து வந்த நடைமுறை.
உரிமை பறிபோகும் அபாயம்
சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்: அணையில் தமிழக அரசுக்கு இருந்து வந்த படகு போக்குவரத்து உரிமை, மீன்பிடிப்பு உரிமை, தமிழக போலீஸ் பாதுகாப்பு உரிமை, குமுளியில் இருந்து தேக்கடி படகு நிறுத்தப் பகுதி வரை உள்ள ரோட்டின் உரிமை ஆகிய முக்கிய உரிமைகள் அனைத்தும் பறிபோனது போல், தற்போது அணையில் பராமரிப்பு பணி நடைபெறும் உரிமையும் பறிபோகும் அபாயம் உள்ளது.
கருப்பு கொடி ஏற்றுவோம்
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்: பெரியாறு அணைக்குச் சென்ற தளவாடப் பொருட்களை தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர்கேம்பில் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பட்டு அறவழியில் போராட்டத்தை நடத்தினோம்.
ஆனால் அனுமதி பெறாமலும் போக்குவரத்துக்கு இடையூறுசெய்ததாகக் கூறி போலீசார் 66 விவசாயிகள்மீது வழக்குப்பதிவு செய்தது வேடிக்கையாக உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் 5 மாவட்ட மக்களை ஒன்று திரட்டி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டுவோம்.
நீரை தேக்க முடியாத நிலை
ராமராஜ், தலைவர், 18ம் கால்வாய் விவசாய சங்கம்: அணையில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர்மட்டம் அதிகம் இருந்தால் மட்டுமே 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயம் நடைபெறும். ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை இக்கால்வாயில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீரைத் தேக்க முடியாத சூழல் உருவாகும்.