/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஜி9' வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் குமுறல்! உற்பத்தி செலவுக்குக்கூட கட்டுபடியாகாததால் விரக்தி
/
'ஜி9' வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் குமுறல்! உற்பத்தி செலவுக்குக்கூட கட்டுபடியாகாததால் விரக்தி
'ஜி9' வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் குமுறல்! உற்பத்தி செலவுக்குக்கூட கட்டுபடியாகாததால் விரக்தி
'ஜி9' வாழைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் குமுறல்! உற்பத்தி செலவுக்குக்கூட கட்டுபடியாகாததால் விரக்தி
ADDED : அக் 08, 2025 06:52 AM

கூடலுார்; மாவட்டத்தில் பச்சை வாழைப்பழத்தின் விலை அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். உற்பத்திச் செலவுத்தொகையை ஈடுகட்டுவதற்கான விலை கூட கிடைக்காத நிலையில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் குமுறுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஜி9 எனும் பச்சை வாழை 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி ஆகிறது. இதனை நம்பி கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், கோம்பை, தேவாரம், சீப்பாலக்கோட்டை பகுதிகளில் நுாற்றுக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நல்ல விளைச்சல் தரும் இந்த வாழைப் பழங்கள் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் பச்சை வாழைப்பழம் தவிர நாழிப்பூவன், செவ்வாழை, நேந்திரன் உள்ளிட்ட ரகங்களும் பயிரிடப்பட்டுள்ளன. மற்ற அனைத்து பழங்களுக்கும் போதுமான விலை கிடைத்து வரும் நிலையில் மருத்துவ குணம் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த பச்சை வாழைப்பழத்திற்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையானது. தற்போது மீண்டும் குறைந்து கிலோவுக்கு ரூ.6 ஆக உள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.3.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், உற்பத்திச் செலவு கூட கிடைக்காத நிலையில் அறுவடை செய்ய முடியாமல் இருப்பதாக பச்சை வாழை பயிரிட்ட விவசாயிகள் குமுறுகின்றனர்.
வெங்கடேஷ் குமார், வாழை விவசாயி, கூடலுார்: ஒரு வாழைக்கு உற்பத்தி செலவு ரூ. 350 முதல் 400 வரை ஆகிறது. குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 25 ஆக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். தற்போது ரூ.6க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் ஏக்கருக்கு ரூ.3.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவிலும், மதுரை மாவட்டத்திலும் ரூ.22 முதல் ரூ.25 வரை விலை உள்ளது. ஆந்திராவில் இருந்து பச்சை வாழைப் பழங்களை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றனர்.