/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏமாற்றம் n 18ம்கால்வாய் நீர் திறப்பு தாமதத்தால் விவசாயிகள் n - விவசாயத்திற்கு நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்
/
ஏமாற்றம் n 18ம்கால்வாய் நீர் திறப்பு தாமதத்தால் விவசாயிகள் n - விவசாயத்திற்கு நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்
ஏமாற்றம் n 18ம்கால்வாய் நீர் திறப்பு தாமதத்தால் விவசாயிகள் n - விவசாயத்திற்கு நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்
ஏமாற்றம் n 18ம்கால்வாய் நீர் திறப்பு தாமதத்தால் விவசாயிகள் n - விவசாயத்திற்கு நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்
ADDED : நவ 20, 2024 05:38 AM

கூடலுார் : 18ம் கால்வாய் நீர் திறப்பதில் ஏற்படும் தாமதத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நீர் இருப்பு அதிகமாக இருக்கும் போது உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் 55 கி.மீ., தூரம் கொண்டதாகும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறப்பது வழக்கம். இக்கால்வாய் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 55 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து 30 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும். இது தவிர உத்தமபாளையம், போடி வட்டாரங்களில் 6839 ஏக்கர் நேரடிப் பாசனமும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீர் திறப்பதற்கு முன்பு நீர்வரத்து கால்வாய் சீரமைக்க வேண்டும். ஆனால் திட்டம் துவங்கி பல ஆண்டுகளாகியும் பெயரளவிற்கு ஓரிரு ஆண்டுகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சீரமைத்ததால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. 2023 அக்., நவ.,ல் நீர் இருப்பு போதிய அளவு இருந்தபோதிலும் அரசு உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் டிச. 19ல் திறக்கப்பட்டது. அதுவும் திறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஜீரோ பாயிண்ட் மற்றும் தொட்டி பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் நிறுத்தப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணி நடத்தி மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் முழுமையாக கண்மாய்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு செப்., அக்.,ல் நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் திறக்காதது விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
போதிய நீர் இருப்பு இருந்தும் திறப்பில் தாமதம்
ராம்ராஜ், தலைவர், 18ம் கால்வாய் விவசாய சங்கம், கோம்பை: ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நீர் திறப்பு குறித்து மனு அனுப்புவோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இந்த ஆண்டு ஜூன், ஜூலையில் 18ம் கால்வாய் கரைப்பகுதியை சீரமைக்க வலியுறுத்தினோம். இதுவரை முழுமையாக சீரமைக்கவில்லை. பெரியாறு அணையில் நீர் இருப்பு இருக்கும் போது திறக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது. 18ம் கால்வாயில் 19 நாட்களுக்கு மட்டுமே 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதற்கு தற்போது அணையில் நீர் இருப்பு போதுமானதாகும். ஆனால் மதுரை குடிநீருக்காக தண்ணீர் கொண்டு செல்வதால் 18ம் கால்வாயில் நீர் திறப்பதற்கு தாமதம் ஆகிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. விவசாயத்திற்காக கால்வாயில் நீர் திறப்பை அரசு உறுதிப் படுத்த வேண்டும், என்றார்.

