/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்ந்து கொட்டிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர்ந்து கொட்டிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 13, 2025 05:38 AM

தேனி :தேனி, போடி நகர்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள், விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி நகர் பகுதியில் நேற்று மாலை இரண்டாவது நாளாக மழை பெய்தது. நகர் பகுதியில் கடைகளுக்கு வந்திருந்த பொது மக்கள் சிலர் நனைந்தவாறு திருப்பிச் சென்றனர். நேற்று முன்தினம் அரண்மனைப்புதுாரில் 50.8 மி.மீ., ஆண்டிபட்டி 7.4 மி.மீ., வீரபாண்டி 5.2 மி.மீ., போடியில் 15.8 மி.மீ., கூடலுார் 6.4, உத்தமபாளையம் 4.6 மி.மீ., சோத்துப்பாறை 1.4 மி.மீ., சண்முகாநதி அணையில் 1.8 மி.மீ., மழை என மொத்தம் 93.6 மி.மீ., மழை பதிவானது.
போடி பகுதியில் சில மாதங்களாக மழை இன்றி ஆறுகள், கண்மாய்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறண்டு காணப்பட்டன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, தோட்டப் பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு இருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். கடந்த 3 நாட்களாக மதியத்திற்கு மேல் போடி, குரங்கணி, கொட்டகுடி, சில்லமரத்துபட்டி, தேவாரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்துள்ளது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மலைப் பகுதியில் பெய்து தொடர் கனமழையால் வறண்டு கிடந்த கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து துவங்கியுள்ளது. நேற்று மதியம் 1:30 மணிக்கு மேல் பெய்ய துவங்கிய கனமழையானது 2:30 மணி வரை நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.