/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க 'சிபில் ஸ்கோர்' முறையை தளர்த்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க 'சிபில் ஸ்கோர்' முறையை தளர்த்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க 'சிபில் ஸ்கோர்' முறையை தளர்த்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க 'சிபில் ஸ்கோர்' முறையை தளர்த்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2025 12:45 AM

தேனி: ''தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் பயிர் கடன் திட்டங்களில் சிபில் ஸ்கோர்' நடைமுறை தளர்த்த வேண்டும்,'' என விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
முத்துசரவணன், கெங்குவார்பட்டி: கெங்குவார்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்துடன் வாழ்த்து வருகிறோம். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை காலம் கடத்துகிறது.
ஷெசில்வில்பர்ட், மாவட்ட உதவி வனபாதுகாவலர்: மாவட்ட வனத்துறைக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அனுமதி இல்லை. இதற்காக முதன்மை வன பாதுகாவலருக்கு அனுமதிக்க கோரி மனு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் சிறுத்தை பிடிக்கப்படும்.
கலெக்டர்: வனத்துறை பிரச்னைகளுக்கு தீர்வாக நீங்கள் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி, 'டோல் ப்ரீ 'எண்ணை அறிமுகம் செய்தால், விவசாயிகள் எளிதாக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அதனை வனத்துறை உருவாக்க வேண்டும்.
ஜெகதீஸ்வரன், பண்ணைப்புரம்: தென்மேற்கு பருவமழையால் காற்றால் பயிரிட்ட வாழை மரங்கள் ஒடிந்து சாய்ந்து விட்டன. இதனால் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க வேண்டும்.
டி.ஆர்.ஓ: வாழை மரங்களுக்கு கம்பு கட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதை நீங்கள் செய்துள்ளீர்களா என ஆய்வு செய்து, பேரிடம் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க முடியுமா என ஆய்வு செய்து, இதுகுறித்து முடிவு செய்யப்படும்.
சீனிராஜ், பள்ளபட்டி: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன், இதர கடன்கள் பெறும் விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' பார்க்கும் நடைமுறையை தளர்த்த வேண்டும்.
கலெக்டர்: சில விவசாயிகள் பொதுத்துறை வங்கியிலும், தனியார் வங்கியிலும் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் உள்ளபோது, எவ்வாறு அவர்கள் பயனாளிகளாக கருதப்படுவர்.
நர்மதா, கூட்டுறவு இணைப்பதிவாளர்: தனியார், பொதுத்துறை வங்கிகளின் ஆதார் பதிவேற்ற நடைமுறையில் விதிமுறைகளுக்கு மீறி விவசாயிகள் கடன் பெறுவது தெரியவருகிறது.பொதுத்துறை, தனியார் வங்கிகள் என 2 துறைகளில் ஒரு சில விவசாயிகள் கடன் பெறுவதால் இப்பிரச்னை உள்ளது. அவ்வாறு கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதிலும், பிற திட்ட கடன் வழங்குவதிலும் பிரச்னை இல்லை. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கலெக்டர்: விவசாயிகள் பிற தனியார் வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் இருந்திருந்தால், அவர்களுக்கு பயிர்கடன் இதர கடன் பெறுவது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இருப்பினும் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்., என்றார்.