காந்திகிராமத்தில் பரவும் காய்ச்சல்: குடிநீர் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
காந்திகிராமத்தில் பரவும் காய்ச்சல்: குடிநீர் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
UPDATED : ஜூன் 18, 2026 04:58 PM
ADDED : ஜூன் 18, 2026 04:50 PM

கூடலுார்:கூடலுார் காந்திகிராமத்தில் காய்ச்சல் பரவியதால் குடிநீரை மாதிரி எடுத்து சுகாதாரத் துறையினர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
காந்திகிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரு நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரவியது. திடீர் காய்ச்சலால் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. குடிநீரால் பாதிப்பு உள்ளதா என குடிநீர் மாதிரி எடுத்து மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
கலெக்டர் வைத்திநாதன் மருத்துவ முகாமை பார்வையிட்டார். கலங்கலாக குடிநீர் வினியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பெண்கள் சேகரித்து வைத்திருந்த கலங்கிய குடிநீரை கலெக்டரிடம்
காண்பித்தனர். குடிநீர் வினியோகமாகும் அனைத்து பகுதிகளையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
