ADDED : ஏப் 28, 2025 06:38 AM
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம் கண்டமனுாரில் கட்டை பையில் 4 கிலோ கஞ்சாவை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த அதேப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி 20, ஜெயபிரகாஷ் 25, ஆனந்த பாண்டி 23, சதீஷ் 20, இளங்கோவன் 24, உள்ளிட்ட ஐவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கண்டமனுார் அருகே கஞ்சா பதுக்கி விற்பதாக எஸ்.ஐ., பாண்டியம்மாள், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கண்டமனுார் சுடுகாடு அருகே நின்றிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்த கட்டைப் பையை எடுத்துக்கொண்டு ஓட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தனர். கட்டைப்பையை சோதனை செய்ததில் பையில் 2 கிலோ கொண்ட இரு பார்சல்களில் 4 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர்கள் கண்டமனுாரை சேர்ந்த கருப்பசாமி, ஜெயபிரகாஷ், ஆனந்தபாண்டி, சதீஷ், இளங்கோவன், என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்த தகவலில் கஞ்சா வியாபார தொடர்பில் இருந்த கண்டமனுாரைச் சேர்ந்த முத்து, தேனி கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சரண் பிரதீப், ஆண்டிபட்டி மணியாரம்பட்டி சேர்ந்த மாதவன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.