/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆர்.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலி ஐந்து அலுவலர்கள் இடமாற்றம்
/
ஆர்.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலி ஐந்து அலுவலர்கள் இடமாற்றம்
ஆர்.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலி ஐந்து அலுவலர்கள் இடமாற்றம்
ஆர்.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலி ஐந்து அலுவலர்கள் இடமாற்றம்
ADDED : மே 01, 2025 01:12 AM
தேனி:தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பறிமுதல் செய்த ரூ.62,140க்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்காத ஆர்.டி.ஓ., சிங்காரவேலு உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது துறை ரீதியான நடவடிக்கையில் நேர்முக உதவியாளர் உட்பட 5பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்கார வேலு கடந்த ஆண்டு தேனியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். அக். 8 ல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுந்தரராஜ் தலைமையில் போலீசார் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.62,140 பறிமுதல் செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் சமர்க்கப்படவில்லை.
இதனால் ஆர்.டி.ஓ., அவரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிவண்ணன், அழகேசன், கண்காணிப்பாளர்கள் முத்துநாராயணன், மதிவாணன், கணக்கர் அலெக்ஸ் சாமுவேல்ராஜா, உதவியாளர்கள் ராகவன், கவுதம், இளநிலை உதவியாளர்கள் ஜோதிலட்சுமி, முருகன், சங்கீதா, தட்டச்சர் ஹேமலதா ஆகிய 13 பேர் மீது லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த பிப்ரவரியில் ஆர்.டி.ஓ., சிங்காரவேலு மதுரையில் இருந்து சென்னை பறக்கும் படைக்கு மாற்றப்பட்டார். நேற்று துறை நடவடிக்கையாக நேர்முக உதவியாளர் முரளீதரன் வாணியம்பாடிக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிவண்ணன் கரூருக்கும், அழகேசன் மயிலாடுதுறைக்கும், கண்காணிப்பாளர் மதிவாணன் கோவை மாவட்டம் வால்பாறை யூனிட் அலுவலகத்திற்கும், கண்காணிப்பாளர் முத்துநாராயணன் நீலகிரி மாவட்டம் கூடலுார் யூனிட் அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த நால்வர் தவிர 8 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

