/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்ச்சல்: மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பு
/
காய்ச்சல்: மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பு
ADDED : நவ 11, 2024 05:01 AM
கம்பம்: மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது, கிராமங்கள் நகரங்களிலும் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கூட்டம் அதிகரித்துள்ளது.
வெயில், மழை, குளிர் என திடீர் திடீரென சீதோஷ்ண நிலை மாறுகிறது.
நேற்று முதல் கம்பம் பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது. கம்பம் பகுதியில் கிராமங்கள், நகரங்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல், உடம்பு வலி, கை கால் குடைச்சல் என டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்களுக்கு உரிய அறிகுறிகள் தெரிகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு என கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் காய்ச்சலுக்கான காரணம், தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பதில் சுகாதாரத்துறை சுணக்கமாக உள்ளது. இதில் சிறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மருந்துவத் துறையினர் கூறுகையில், 'சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மூன்று நாட்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் சரியாகும். சில பகுதிகளில் காய்ச்சல் இல்லாமல் உடம்பு வலி மட்டும் உள்ளது என்று ரிப்போர்ட் ஆகி உள்ளது. குறிப்பாக சின்னமனுார், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த பாதிப்பு உள்ளது. கிராம செவிலியர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.', என்றனர்.