ADDED : மார் 13, 2024 01:19 AM

போடி:தேனி மாவட்டம் போடி அருகே மரக்காமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 ஏக்கருக்கு மேல் மரங்கள் எரிந்தன.
போடி, போடிமெட்டு, கழுகுமலை பீட், மங்கள கோம்பை, மதிகெட்டான் சோலை , வடக்கு மலை உட்பட பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதியாக உள்ளது. இங்கு சமூக விரோத கும்பல் மரங்களுக்கு அவ்வப்போது தீ வைத்து பாதை ஏற்படுத்தி மரத்தை கடத்துகிறது.
நேற்று முன்தினம் இரவு போடி அணைக்கரைப்பட்டி அருகே 3 கி.மீ., தூரம் உள்ள தேனி பீட் மரக்காமலை வனப்பகுதியில் மர்மநபர்களால் தீ வைக்கப்படது. அதில் பரவிய காட்டுத் தீயானது 2 வது நாளாக நேற்று மதியத்திற்கு மேலும் எரிந்து கொண்டிருந்தது. இதனால் 25 ஏக்கருக்கு மேல் மரங்கள் எரிந்து சேதமானது. புகை மண்டலமாகவும், வெயில் அதிகரிப்பாலும் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர். இதனால் வனவிலங்குகள் உயிர் பலியாவதோடு, இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடரும் தீ வைப்பு சம்பவத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

