/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ.,வில் சேருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சி கலக்கம்
/
பா.ஜ.,வில் சேருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சி கலக்கம்
பா.ஜ.,வில் சேருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சி கலக்கம்
பா.ஜ.,வில் சேருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சி கலக்கம்
ADDED : மார் 21, 2024 02:42 AM

மூணாறு: கேரளா, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தமிழர் இருந்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜேந்திரன் 2006 முதல் 2021 வரை தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு கட்சி சீட் தரவில்லை. மேலும் கட்சி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டார் என கூறி கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.
தொகுதியில் செல்வாக்கு மிக்க ராஜேந்திரனின் மீதான நடவடிக்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கு சரிவை ஏற்படுத்தும் என மேலிடம் கருதியது.
அவரை மீண்டும் கட்சியில் இணைக்க சிலர் முயன்றனர்.முதல்வர் பினராயி விஜயன், மாநில, மாவட்ட முக்கிய பிரமுகர்கள் ராஜேந்திரனை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைத்தனர். இதையடுத்து மூணாறில் மார்ச் 17ல் இடதுசாரி கூட்டணி சார்பில் நடந்த லோக்சபா தேர்தல் பொதுகூட்டத்தில் ராஜேந்திரன் பங்கேற்றார். ஆனால் அவரை புறக்கணிக்கும் வகையில் கட்சியின் சில தலைவர்கள் நடந்து கொண்டனர். அதனால் கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று டில்லியில் கேரள மாநில பா.ஜ. பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தார். அவர் பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இதனால் மார்க்சிஸ்ட் கட்சியினர் கலக்கம் அடைந்தனர்.
ராஜேந்திரனிடம் அலைபேசியில் கேட்டபோது அவர் கூறியதாவது: பிரகாஷ் ஜவடேகரை இதற்கு முன்பும் பலமுறை சந்தித்துள்ளேன். எனது வீட்டிற்கும் அவர் வந்துள்ளார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னை, வன விலங்கு நடமாட்டம் குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
பா.ஜ.,விடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். அதனை ஏற்கும் பட்சத்தில் என்னுடைய செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றார்.

