/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளால் நான்கு கடைகள் சேதம்
/
காட்டு யானைகளால் நான்கு கடைகள் சேதம்
ADDED : மார் 18, 2024 06:33 AM

மூணாறு : மூணாறு அருகே மாட்டுபட்டி, தேவிகுளம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நான்கு கடைகளை சேதப்படுத்தின.
மூணாறு பகுதியில் மிகவும் சாதுவாக நடமாடிய படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகஆக்ரோஷமாக நடமாடி வருவதுடன் ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது. மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பிப்.26ல் தொழிலாளி சுரேஷ்குமாரைகொன்றது படையப்பா என தெரிய வந்த நிலையில், அதனை வனத்துறையினர் உறுதி செய்யவில்லை. அதனால் படையப்பா காட்டு யானையை பார்த்து தொழிலாளர்கள் உள்பட, மக்கள் அச்சத்தில் நடமாடி வந்தனர். படையப்பா நேற்று காலை மூணாறு அருகே முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டு பட்டி அணைக்கு சென்றது. அங்கு படகு குழாமுக்குச் செல்லும் நுழைவு பகுதியில் ரோட்டோரம் உள்ள வினு, ஜான்சன் ஆகியோரின் கடைகளை சேதப் படுத்தியது.
சேதம்
மூணாறு அருகே தேவிகுளம் எஸ்டேட் மிடில் டிவிஷன் பகுதியில் சுற்றித்திரிந்த ஆறு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வந்தன. அவை, அங்குள்ள இம்மானுவேலின் 2 இறைச்சி கடைகளை சேதப்படுத்தின. காலை 6:00 மணி வரை குடியிருப்புபகுதியில் முகாமிட்ட யானைகளை தொழிலாளர்கள் காட்டிற்குள்விரட்டினர்.

