/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க இலவச அனுமதி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க இலவச அனுமதி
ADDED : ஜன 27, 2025 04:56 AM

பெரியகுளம் : குடியரசு தினத்தை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை இலவச அனுமதி வழங்கியது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பாம்பார்புரம், வட்டக்காணல், கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளது. நேற்று குடியரசு தினம் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல தயாராகினர். டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்றனர். வழக்கமாக நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20 வீதம் வசூலிக்கப்படும்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதியை, தேவதானப்பட்டி வனச்சரகம் அறிவித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை முதல் மாலை வரை அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

