/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 13,112 பேருக்கு சுயதொழில் இலவச பயிற்சி வழங்கல்; கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல்
/
மாவட்டத்தில் 13,112 பேருக்கு சுயதொழில் இலவச பயிற்சி வழங்கல்; கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல்
மாவட்டத்தில் 13,112 பேருக்கு சுயதொழில் இலவச பயிற்சி வழங்கல்; கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல்
மாவட்டத்தில் 13,112 பேருக்கு சுயதொழில் இலவச பயிற்சி வழங்கல்; கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல்
ADDED : மார் 21, 2025 06:41 AM

தேனி : தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகையுடன், இலவசமாக பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள கனராவங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம் வழங்கி வருகிறது. இந்த மையம் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் 13,112 பேர் சுய தொழில் பயிற்சி பெற்றுள்ளனர்.
பலர் முனைவோராக உருவாகி உள்ளனர். இந்த மையத்தின் செயல்பாடுகள் பற்றி பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது:
சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் பற்றி
இந்த பயிற்சி மையம் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த வங்கி முன்னோடி வங்கியாக உள்ளதோ அந்த வங்கியின் கீழ் இந்த ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கனரா வங்கி முன்னோடி வங்கியாக செயல்படுவதால், வங்கி மூலம் பயிற்சி மையம் செயல்படுத்தப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படுகிறது.
என்னென்ன பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது
பயிற்சி மையம் மூலம் விவசாயம், உற்பத்தி, சேவை என மூன்று பிரிவுகளில் 66 பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்திற்கு ஏற்ற 35 பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் குறைந்த பட்சம் 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை வழங்கப்படும். பயிற்சியில் 80 சதவீதம் களப்பயிற்சியாக இருக்கும்.
விவசாயம் தொடர்பாக காளான் வளர்ப்பு, மீன்பண்ணை அமைத்தல், நறுமணப் பொருட்கள் சாகுபடி, மூலிகை சாகுபடி, உற்பத்தி தொடர்பாக பூஜை, வாசனை பொருட்கள் தயாரித்தல், பேப்பர் கவர் தயாரிப்பு, சணல்நார் பொருட்கள் தயாரித்தல், ஆபரண நகை தயாரிப்பு பயிற்சிகள், சேவை பிரிவில் போட்டோ, வீடியோ கிராபி, பெண்களுக்கு அழகு கலை பயிற்சி, டூவீலர் பழுது நீக்கம், சி.சி.டி.வி., பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பயிற்சிகளில் பங்கேற்க கல்வித்தகுதி வேண்டுமா
நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு 8 ம் வகுப்பு, கணினி டேலி பயிற்சிக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்ற பயிற்சிகளுக்கு கல்வித்தகுதி அவசியமில்லை. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை வழங்கப்படும்.
பயிற்சி நேரம், உணவு, தங்கும் வசதி பற்றி
அனைத்து வகை பயிற்சி, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஆண்கள், பெண்கள் தங்கி பயிற்சி பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பயிற்சிக்கு வருபவர்களுக்கு காலை, மதிய உணவு, இருவேளை டீ வழங்கப்படுகிறது. இங்கேயே தங்கி பயிற்சி பெறுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. ஒருவருக்கு பயிற்சி வழங்க ரூ.5ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது.
உதவித்தொகை வழங்கப்படுகிறதா
கிராமங்களில் இருந்து பயிற்சிக்கு வருபவர்களில் குடும்பத்தினர் யாரேனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு எத்தனை நாட்கள் பயிற்சி பெறுகிறார்களே அந்த நாட்களுக்கு உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் வழங்கப்படுகிறது.
மையத்தில் பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை
பயிற்சி மையம் செயல்பட துவங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை 13,112 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 809 பெண்கள் உட்பட 1021 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 611 பேர் சுயதொழில் துவங்க வங்கிகள் மூலம் மானியக்கடன் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பயிற்சியின் போது தேர்வு செய்த பயிற்சி மட்டுமின்றி, அடிப்படை ஆங்கிலம், கணினி பயிற்சி, சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்வது போன்ற பயிற்சியும் வழங்குகிறோம்.
கோடை விடுமுறையில் ஊரக பகுதிகள், கல்லுாரிகளில் பயிற்சிகள் வழங்கப்படுமா ஊராட்சி, நகராட்சி,பேரூராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து பயிற்சி வழங்க கூறினால், சில பயிற்சிகள் அந்த பகுதிகளில் வழங்க முடியும். பயிற்சி பெற விரும்புபவர்கள் நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக கல்லுாரி நிர்வாகங்களிடம் பேச உள்ளோம். பயிற்சி வகுப்புகளில் சேர யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தேனி கருவேல் நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
சேர விரும்புபவர்கள் ஆதார் நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகத்துடன் வரலாம். ஒருவர் ஆண்டிற்கு ஒரு பயிற்சிமட்டும் பெற முடியும். அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களும் மையம் செயல்படும். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.