/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி பணி தீவிரம்
/
இலவச பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி பணி தீவிரம்
ADDED : செப் 30, 2025 04:55 AM
தேனி: தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி பணிகள் கால்நடைபராமரிப்புத்துறை மூலம் செப்.25ல் துவங்கியது அக்.15 வரை 21 நாட்கள் நடக்க இருக்கிறது.
இது குறித்து மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது: இந்நோய் பாதிப்பால் பன்றிவளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படும். இது கொடிய வைரஸ் தொற்று நோயாகும். இதனால் பன்றிகள் தீவனம் உட்கொள்ளாத நிலை ஏற்படும்.
அதீத உடற்சோர்வு ஏற்பட்டு, சில நேரங்களில் பன்றிகள் உயிரிழக்கும் அபாயமும் உண்டு. இந்நோய் நோயுற்ற பன்றிகளின் உமிழ்நீர், மூக்கிலிருந்து வடியும் நீர்,சிறுநீர், சாணம், ஆகியவற்றின் மூலம் நேரடியாக நோயில்லாத பன்றி களுக்கு பரவும்.
இதனால் நோய் தாக்கிய பன்றிகளின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதோடு, இறப்பு சதவீதம் மிக அதிகரிக்கும். சிகிச்சை முறைகள் எதுவும் பலனளிக்காது. தடுப்பூசி செலுத்துவது ஒன்றே தீர்வாகும்.
இதனால் கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 880 பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசிஇலவசமாக செலுத்தப்படுகின்றன. இத்தடுப்பூசி மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு செலுத்தப்படுகிறது என்றார்.