ADDED : செப் 01, 2025 02:41 AM

மூணாறு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கன்னியாற்றில் கரைக்கப்பட்டன.
மூணாறில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நகரில் ஆறு இடங்கள், கன்னிமலை எஸ்டேட்டில் லோயர், டாப் ஆகிய டிவிஷன்கள், சைலன்ட்வாலி எஸ்டேட்டில் ஒன்றாம், மூன்றாம் ஆகிய டிவிஷன்கள், சோலைமலை, நயமக்காடு, போதமேடு, சொக்கநாடு, பழைய மூணாறு ஆகிய பகுதிகள் என 17 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அவை நேற்று மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலை சென்றடைந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் வலம் வந்தது. பின் கன்னியாற்றின் அருகே விசர்ஜன பூஜைகள் செய்யப்பட்டு, பின் ஆற்றில் கரைக்கப்பட்டன.