/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி; இரு வனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
/
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி; இரு வனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி; இரு வனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டக்காவலாளி பலி; இரு வனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
ADDED : பிப் 22, 2024 06:08 AM

தேனி: தேனி மாவட்டம் கூடலுார் வனப்பகுதியில் 2023 அக். 28 ல் இரவு வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டத்தில், குள்ளப்பக்கவுண்டன்பட்டி தோட்டக்காவலாளி ஈஸ்வரன் 55, பலியான வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனவர்கள் ஜார்ஜ்குட்டி (எ) பென்னி, திருமுருகன் ஆகிய இருவர் மீது லோயர்கேம்ப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வனப்பகுதி வண்ணாத்திப்பாறை காப்புக்காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து, வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கூடலுார் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2023 அக்., 28 ல் இரவு 2 குழுக்களாக பிரிந்து, யானைப்புகா அகழி வழியாக முடநாரி புதுப்பாலம் நோக்கி ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்ட வனத்துறையினர் குள்ளப்பக் கவுண்டன்பட்டியை சேர்ந்த தோட்டக்காவலாளி ஈஸ்வரன் 55, பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். அப்போது தோட்டக்காவலாளிக்கும், வனத்துறையினருக்கும் ஏற்பட்ட தகராறில் வனவர் திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரன் பலியானார்.
இதுகுறித்து கூடலுார் ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'வனப்பகுதியில் பிடிபட்ட ஈஸ்வரன், அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். விரட்டிப்பிடித்து அவரிடம் விசாரித்த போது, கத்தியால் வனத்துறையினரை குத்த முயன்றதால், தற்காப்புக்காக ஈஸ்வரனை திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதில் மயங்கி விழுந்து பலியானார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ஈஸ்வரனின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தீவிர விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். பின் அப்போதைய தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோருடன் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் இரவில் சம்பவம் நடந்த வனப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பின் பலியான ஈஸ்வரன் உடல் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஈஸ்வரனின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, 'வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தேனி எஸ்.பி., சிவபிரசாத் நேரடியாக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. எஸ்.பி., உத்தரவில் வனவர்கள் ஜார்ஜ்குட்டி (எ) பென்னி, திருமுருகன் ஆகிய இருவர் மீது, லோயர்கேம்ப் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.