UPDATED : ஜூன் 15, 2026 07:26 PM
ADDED : ஜூன் 15, 2026 07:11 PM
உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் எதிரே உள்ள முல்லையாறு படித்துறையில் பரிகாரம் செய்வோர் குப்பையை விட்டு செல்வதால் மாசுபட்டு வருகிறது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் புராதானமானது. காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இந்த கோயிலிற்கு எதிரில் முல்லையாறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் சமீப காலமாக பல்வேறு தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகளை புரோகிதர்கள் செய்கின்றனர். பரிகார பூஜை முடிந்தவுடன் சேகரமாகும் பொருள்களை குறிப்பாக உடுத்தியுள்ள வேட்டி , துண்டு ஆகியவற்றை முல்லையாற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் குளிக்க வரும் பொதுமக்களும், துணிகளை சலவை செய்ய வரும் பெண்களும் முகம் சுளிக்கின்றனர்.
சிலர் அப்படியே வெட்ட வெளியில் போட்டுவிட்டு செல்கின்றனர். பேரூராட்சியின் துப்புரவ பிரிவு இவற்றை அகற்ற வேண்டும். பரிகார பூஜைகளை செய்வோர் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
