/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோதகத்தி மரங்கள் விற்பனை தடையை நீக்கி அரசு உத்தரவு
/
தோதகத்தி மரங்கள் விற்பனை தடையை நீக்கி அரசு உத்தரவு
தோதகத்தி மரங்கள் விற்பனை தடையை நீக்கி அரசு உத்தரவு
தோதகத்தி மரங்கள் விற்பனை தடையை நீக்கி அரசு உத்தரவு
ADDED : ஜூலை 07, 2025 03:30 AM
கம்பம்: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்த தோதகத்தி (Rose wood) மரங்கள் விற்பனைக்கான தடையை நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அழிந்து வரும் மரங்களில் தோதகத்தி முதலிடம் பெற்றது. மரம் கடினமாக இருப்பதால் வீடு ஜன்னல், நிலை, கதவுகள் செய்ய அதிகளவில் விரும்பி வாங்கப்படும். இதனால் தோதகத்தி மரங்களை சட்ட விரோதமாக வெட்டி கடத்துவதும், விற்பனையும் அதிகம் இருந்தது.
இதனால் வனப்பகுதிகளிலும் தோதகத்தி இனங்கள் குறைய துவங்கின. எனவே 1994 ல் தமிழக அரசு தோதகத்தி மரங்களை பட்டா நிலங்களில் இருந்தாலும் வெட்டுவதற்கும், கடைகளில் இருப்பு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்தது. இந்த தடை சட்டம் முதலில் 15 ஆண்டுகளுக்கு 2010 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின் 2010ல் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து 2025 பிப்., வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது 2025 ல் இந்த தடை தேவையில்லை என்று வனத்துறை விலக்கி கொண்டுள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த தடை சட்டத்தால் பயனில்லாத நிலை ஏற்பட்டது. வனப்பகுதிகளிலும் மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தனியார் பட்டா காடுகளிலும் இந்த வகை மரங்களை வளர்க்க பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்தது. மேலும் தடை சட்டத்தினால் பட்டா காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்யவும் முடியாத நிலை இருந்தது. தற்போது தனியார் பட்டா காடுகளில் தோதகத்தி மரங்களை வளர்க்கவும், வெட்டி விற்பனை செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுள்ளது. இம்மரங்களை வெட்டும் போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த அரசாணைக்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'தோதகத்தி மரம் நன்றாக வளர 40 முதல் 50 ஆண்டுகளாகும். எனவே யாரும் அதை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்ட முடியாது.
இந்த அரசாணை மூலம் தற்போது பட்டா காடுகளில் இருக்கும் தோதகத்தி மரங்களும் இல்லாமல் போகும். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும்,' என்றனர்.