/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தம்பதி மாயம் உடன் சென்ற பேத்தி மீட்பு
/
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தம்பதி மாயம் உடன் சென்ற பேத்தி மீட்பு
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தம்பதி மாயம் உடன் சென்ற பேத்தி மீட்பு
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தம்பதி மாயம் உடன் சென்ற பேத்தி மீட்பு
ADDED : டிச 31, 2025 04:58 AM

கூடலுார்: தேனி மாவட்டம் கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றை பேத்தியுடன் கடக்க முயன்ற கணவர் சங்கர் 55, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். காப்பாற்ற சென்ற மனைவி கணேஸ்வரி 50, நீரில் மூழ்கினார். உடன் சென்ற பேத்தி சஞ்சு 6, உயிருடன் மீட்கப்பட்டார்.
கூடலுார் அருகே லோயர்கேம்பைச் சேர்ந்தவர் சங்கர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் வளர்த்து வரும் பசுக்களுக்கு தீவனத்திற்காக லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் உள்ள மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் அருகே வண்ணாந்துறையில் பசும்புல் அறுத்து வருவது வழக்கம். இவரது மனைவி கணேஸ்வரி இருவரும் வழக்கம்போல் நேற்று மதியம் அப்பகுதிக்கு புல் அறுக்க சென்றனர்.
புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது ஆற்றின் எதிர் கரையில் இவரது மகள் லட்சுமி, பேத்தி சஞ்சு 6, வந்துள்ளனர். பேத்தியை அழைத்து வருவதற்காக ஆற்றுக்குள் இறங்கி ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்ற சங்கர் தனது பேத்தியை தோளில் வைத்துக் கொண்டு மீண்டும் இக்கரைக்கு வரும்போது எதிர்பாராவிதமாக இருவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது. கரையில் புல் அறுத்துக் கொண்டிருந்த மனைவி இவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கியுள்ளார். இவரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணியாளர் மணி ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றினார். கணவன் மனைவி இருவரையும் ஆற்று நீர் அடித்துச் சென்றது. லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரின் உடலையும் தேடி வருகின்றனர்.
இதற்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன்பின் குறுவனத்துப் பகுதியில் இருந்து காஞ்சிமரத்துறை வரை ஆற்றின் கரையோர பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் கண் முன்னே தாய், தந்தையை ஆற்று நீர் இழுத்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

