/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணை நுாறு சதவீதம் பலமாக உள்ளது விவசாய சங்கத்தினரிடம் அதிகாரி விளக்கம்
/
முல்லைப் பெரியாறு அணை நுாறு சதவீதம் பலமாக உள்ளது விவசாய சங்கத்தினரிடம் அதிகாரி விளக்கம்
முல்லைப் பெரியாறு அணை நுாறு சதவீதம் பலமாக உள்ளது விவசாய சங்கத்தினரிடம் அதிகாரி விளக்கம்
முல்லைப் பெரியாறு அணை நுாறு சதவீதம் பலமாக உள்ளது விவசாய சங்கத்தினரிடம் அதிகாரி விளக்கம்
ADDED : டிச 31, 2025 04:58 AM
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் டிச., 23 முதல் 28 வரை நடந்த தானியங்கி மதிப்பீட்டு கருவி (ஆர்.ஒ.வி.,) ஆய்வுகள் குறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் அணையின் செயற்பொறியாளர் செல்வம் விளக்கினார். அணை நுாறு சதவீதம் பலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு தமிழகம் வசம் இருந்தாலும் கேரள அரசும் அங்குள்ள அரசியல்வாதிகளும் அணையின் பலம் குறித்து வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர்.
மத்திய நீர்வள கமிஷனின் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அணை பலமாக உள்ளது என கூறிய பின்பும் அவ்வப்போது புரளியை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தண்ணீருக்குள் உள்ள அணை பலவீனமாக இருப்பதாக கூறி துணை கண்காணிப்பு குழுவிடம் மனு அளித்தனர். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் உச்ச நீதிமன்றம் ஆர்.ஒ.வி., சோதனைக்கு உத்தரவிட்டது.
டிச., 23 முதல் 28 வரை நவீன டிஜிட்டல் கேமராக்களின் உதவியுடன் அணையின் அடிப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக கம்பத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், கூடலூர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பென்னிகுக் பேரவை தலைவர் ஆண்டி, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ரஞ்சித், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செயற்பொறியாளர் செல்வம் கூறியதாவது: அணையின் தரையில் இருந்து 104 அடி வரை அணை சுவரின்பலம், விரிசல் உள்ளதா, குழாய்களில் பழுது உள்ளதா, இணைப்புகள் பலமாக உள்ளதா என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆர். ஒ. வி. ஆய்வுகளின் முடிவின்படி அணை 100 சதவீதம் பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.
இந்த ஆய்வில் அணையின் சுவர் பலமாக உள்ளது நிருபிக்கப்பட்டதால் அணையை மேலும் பலப்படுத்த அணையில் உள்ள பைப்புகளுக்குள் சிமென்ட் கலவையை செலுத்தி அணையின் சுவர் 152 அடிவரை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் கிடைமட்டம் 104 அடியிலிருந்து தரை வரை அணையின் சுவர் பலமாக உள்ளது என்பது உறுதியானதால் தமிழக பொதுப்பணித் துறை அடுத்த கட்ட பலப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிகிறது. கூட்ட ஏற்பாடுகளை உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மகேந்திரன் செய்திருந்தனர்.

