/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடுகளில் செடிகள் வளர்த்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
/
வீடுகளில் செடிகள் வளர்த்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
வீடுகளில் செடிகள் வளர்த்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
வீடுகளில் செடிகள் வளர்த்தால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
ADDED : டிச 30, 2024 06:27 AM

மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மழையும் கூடுதலாக பெய்யும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வனப் பகுதிகளிலும் மரங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கின.
இவற்றை சரி செய்யும் வகையில் வனத்துறையினர் பல்வேறு திட்டங்கள் மூலம் கூடுதல் மரக்கன்றுகளை வனப் பகுதியில் நட்டனர். இருந்த போதிலும் நகர் பகுதிகளின் விரிவாக்கம் காரணமாக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மேலும் நான்கு வழிச் சாலை, இருவழிச் சாலை என அமைக்கும் பணியில் ரோட்டோரத்தில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டன.
இதற்கு பதிலாக பெயரளவில் மரக்கன்றுகள் நட்டு கணக்கை காட்டினர்.
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எப்போதும் குளுமையாக உள்ள கேரள எல்லைக்கு அருகே அமைந்திருந்தாலும் இங்கு கூடுதலான மரங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இதன் காரணமாகவே தென்மேற்கு பருவமழையும் போதிய நேரத்தில் பெய்வதில்லை. மரங்கள் அதிகமாக உள்ள கேரளாவில் வீசும் இதமான காற்று, 6 கி.மீ., துாரம் கடந்து தமிழக எல்லையான கூடலுாருக்கு வந்தவுடன் மாறிவிடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் கேரளாவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடலுாரில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றாற் போல் மரகன்றுகள் நட்டு, கூடுதலாக வளர்க்கப்படுவது இல்லை. இதை ஈடுகட்ட புதிய குடியிருப்புகள் கட்டுபவர்கள் மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்க்க கட்டாயமாக்க வேண்டும். இதில் நகராட்சி நிர்வாகம் இதற்காக உத்தரவிட வேண்டும். மேலும் சுத்தமான காற்றை சுவாசிக்க ஒவ்வொரு வீடுகளிலும் செடி, கொடிகளை வளர்த்து பசுமையாக்க வேண்டும். இதை பின்பற்றினால் மாசில்லா கூடலுாரை உருவாக்கலாம்.
எஸ்.எம்.சுப்ரமணி, இயற்கை ஆர்வலர், கூடலுார்: நகர்ப் பகுதியில் மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் செடி, கொடிகள் வளர்த்து பசுமையாக்க வேண்டும். தினந்தோறும் எனது வீட்டில் வளர்த்து வரும் செடி, கொடிகளை பராமரித்த பின்பே எனது அடுத்த கட்ட பணி துவங்கும். மேலும் நெடுஞ்சாலையில் வீடுகளுக்கு முன் அமைக்கப்பட்டு உள்ள சென்டர் மீடியனில் செடிகள் வளர்த்து அவற்றை அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் பராமரிக்க முன்வர வேண்டும். டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் மாசு காரணமாக சுவாசக் கோளாறு அதிகம் ஏற்படுகிறது. இது போன்ற நிலை விரைவில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் துவங்கி கிராமங்கள் வரை வரும் ஆபத்தான சூழல் ஏற்படுவதற்கு முன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். வீடுகளில் ஆக்சிஜன் தரும் செடிகளை அதிகமாக வளர்த்தால் சுத்தமான காற்றை சுவாசித்து வாழ்நாள் நீடிக்கும்., என்றார்.
அருண், சோலைக்குள் கூடல் உறுப்பினர், கூடலுார்: மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக பல்வேறு வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் பூமி எளிதில் வெப்பமயமாகிறது. நிலத்தடி தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. மண் அரிப்பு ஏற்படுகிறது. போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. மழையின் சராசரி அளவு குறைந்து வருகிறது. இவைகளை சமநிலைப்படுத்த மரக்கன்றுகள் நட்டு வளர்த்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம். அதனால் எங்களது, 'சோலைக்குள் கூடல்' அமைப்பு சார்பில், 384 வாரங்களாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றோம். கடந்த சில வாரங்களாக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் செடிகள் நட்டு அதையும் பராமரித்து வருகின்றோம்., என்றார்.