ADDED : அக் 13, 2025 05:22 AM
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள் வழங்கவும், பிற அலுவல் பணிக்காக வரும் பொது மக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகங்கள் எங்கு உள்ளது எனத் தெரியாமல் சிரமம் அடைகின்றனர். வழிகாட்டும் வகையில் அலுவலரை நியமிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நான்கு தளங்களில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு மனுக்கள் வழங்கவும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க பொது மக்கள் வருகின்றனர். ஒவ்வொரு தளத்தில் செயல்படும் அலுவலகங்கள் தொடர்பாக தகவல் பலகை படிக்கட்டுகளுக்கு ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் தெரிவதில்லை. இதனால் பலரும் வெவ்வேறு அலுவலகங்களக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை சந்திக்க மணிக்கணக்கில் காத்திருந்த பின் அங்குள்ள அலுவலர்கள் குறிப்பிட்டத் துறை அலுவலகம், செயல்படும் தளம் பற்றி கூறி அனுப்புகின்றனர். ஆனாலும் பொது மக்கள் பலர் தங்கள் கோரிக்கை எந்த அலுவலகத்திற்கு சென்று தெரிவிப்பது என தெரியாமல் திணறும் நிலை உள்ளது. வழிகாட்டி பலகையை அனைவருக்கும் தெரியும் வகையில் அமைக்கவும், பொது மக்களுக்கு உதவ வழிகாட்டும் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.