/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் வடை மாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு
/
ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் வடை மாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு
ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் வடை மாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு
ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் வடை மாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு
ADDED : டிச 20, 2025 06:16 AM

உத்தமபாளையம்:தேனி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மார்கழி அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் ஹனுமன் அவதரித்தார். அந்த நாளை ஹனுமன் ஜெயந்தி விழா என கொண்டாடுகின்றோம். மாவட்டத்தில் ஹனுமனுக்கான பிரத்யேக கோயில் அனுமந்தன்பட்டியில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் மூலவராக சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சுயம்புவாக தோன்றியவர் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், ஹோமம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து ஹனுமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஸ்பாஞ்சலி நடைபெற்றது. மூலவர் சன்னதி மலர்க் கோலம் போடப்பட்டிருந்தது. செவ்வாழை, பச்சை வாழைப்பழங்கள் சன்னதிக்கு முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேட்ட வரம் தரும் ஹனுமனை அவரது பிறந்த தினத்தில் தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் வந்த தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், அவல், வடை, கேசரி, சர்க்கரை பொங்கல், லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் அவல் பிரசாதங்களை வழங்கினர். அன்னதானமும் நடைபெற்றது.
பெரியகுளம்: பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மங்கள இசையுடன் கோலாகலமாக துவங்கியது. மூலவர் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து ரிசனம் செய்தனர். உற்ஸவர் நரசிம்மர் அலங்காரத்திலும், லட்சுமி தாயாருடனும், மற்றொருவர் சாந்த சொரூபனாக ராம பக்த ஆஞ்சநேயர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், லட்டு, சர்க்கரை பொங்கல் பிரசாதம்வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஐஸ்வர்யம் ஆஞ்சநேயர், வரதராஜப் பெருமாள் கோயிலில் வீர ஆஞ்சநேயர், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி: ஜம்பலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவில் யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு 11 வகை அபிஷேகம் வடை மாலை சாத்தி வழிபட்டனர். பூரண கும்பத்துடன் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானத்தை எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் பூஜை நடந்தது. வெள்ளிக்கவசம் அணிந்த ஆஞ்சநேயர் சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், இனிப்பு வகைகள், வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா குழு சார்பில் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் வடை மாலை அலங்காரத்தில் அனுமனுக்கு சிறப்பு பூஜை, , தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனின் தரிசனம் பெற்றனர். போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வெற்றிலை, வடைமாலை அலங்காரத்தில் அனுமனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் பரம்பரை அரங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார்.

