ADDED : டிச 11, 2025 06:55 AM
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் தினமும் ஒருவர் நாய்கடியால் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியின் உட்கடை கிராமங்களாக கோவிந்தன்பட்டி, காக்கில் சிக்கையன் பட்டி பகுதிகள் உள்ளன. கோவிந்தன்பட்டியையும், அனுமந்தன்பட்டியையும் பிரிக்கும் ஓடை உள்ளது.
மழை காலங்களில் இந்த ஓடை வழியாக காட்டு வாரி தண்ணீர் வெளியேறும். இந்த ஓடையில் பிராய்லர் கடைக்காரர்கள், இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அதனை திண்பதற்காக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக நகருக்குள் உலா வருகிறது.
இறைச்சி கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியவர்களை கடித்து வருகிறது. தினமும் ஒருவர் கடிபட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது. ஆசாரி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பல தெருக்களில் நாய்கள் கூட்டம் உலா வருகிறது. அது மட்டுமல்லாமல் வீடுகளுக்குள் நுழைகிறது.
பொதுமக்கள் புகார் கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் கூறுகின்றனர்.தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

