ADDED : மார் 31, 2025 07:14 AM

கூடலுார் : கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து கேரளாவிற்கு அதிகம் கொண்டு செல்லப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்யும் இயந்திரம் நெல்லை தனியாக பிரித்துக் கொடுப்பதுடன் வைகோலையும் தனித்தனி கட்டுகளாக கட்டிக் கொடுத்து விடுகிறது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் வைக்கோல் அடுத்த முதல் போக நெல் அறுவடை வரை தேவை இருப்பதால், வியாபாரிகள் போட்டிக் போட்டுக் கொண்டு வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதிகமாக வைக்கோல் கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை செய்யும் வயல் பகுதிகளிலேயே வாகனங்களைக் கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர்.
ஒரு ஏக்கரில் 40 கட்டுகள் வரை வரும் வைக்கோலுக்கு ரூ.1700 வரை விலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள வியாபாரிகள் முகாமிட்டு இப்பகுதி விவசாயிகள் இருப்பு வைத்தது போக, மீதமுள்ள வைக்கோலை வாங்கி கேரளாவுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.