ADDED : மே 20, 2025 01:27 AM

போடி: போடி பகுதியில் நேற்றுமுன் தினம் மதியம்பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்ததோடு, கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வர துவங்கியது. இப்பகுதியில் மே மாதம் துவங்கியும் மழை பெய்யாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நிலங்களும் வறண்டு காணப்பட்டன. நெல், சிறு தானியங்கள். பயறு வகைகள், பருத்தி, தோட்டப் பயிர்கள் பயிரிட்டு இருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.
போடி, குரங்கணி, கொட்டகுடி, மேலச் சொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி பகுதியில் நேற்று மதியம் 3:00 மணி அளவில் பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. மலைப் பகுதியில் பெய்த கன மழையால் வறண்டு கிடந்த கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது. மதியம் 3:00 மணிக்கு பெய்ய துவங்கிய கன மழையானது, 4:00 மணிக்கு மேலும் நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.