/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் கன மழையால் நிலச்சரிவு இருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு
/
இடுக்கியில் கன மழையால் நிலச்சரிவு இருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு
இடுக்கியில் கன மழையால் நிலச்சரிவு இருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு
இடுக்கியில் கன மழையால் நிலச்சரிவு இருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2025 03:13 AM

மூணாறு,: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 'ஆரஞ்ச் அலெர்ட்' விடப்பட்டிருந்தது. இதன்படி, நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, சராசரியாக 9.3 செ.மீ., மழை பதிவானது.
அதிகபட்சமாக தேவிகுளம் தாலுகாவில் 15 செ.மீ., மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், மண் சரிவு உட்பட பல்வேறு பாதிப் புகள் ஏற்பட்டன.
உடும்பன்சோலை கல்லுப்பாலம் பகுதியில், தனியார் ஏலத்தோட்டத்தில் மரம் சாய்ந்ததில், தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்த தொழிலாளி லீலாவதி, 60, உயிரிழந்தார்.
தொடுபுழா முட்டம் பகுதியில் மரம் சாய்ந்த நிலையில், கோடிகுளம் மனோஜ், 28, பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
பதிக்காமலை ஓடையின் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, டூ-வீலரில் பாலத்தை கடக்க முயன்ற நிகேஷ், 24, டூ-வீலருடன் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். பின், பாறையை பிடித்து உயிர் தப்பியவரை அப்பகுதியினர் மீட்டனர்.
இம்மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட, மூணாறில் நேற்று முன்தினம் மழை தீவிரமாக இருந்தது.
பகல் முழுதும் இடைவிடாமல் மிதமாக பெய்த மழை, மாலை 4:00 மணிக்கு பின்னர் தீவிர மழையாக மாறியது.
மக்கள், நிலச்சரிவு அச்சத்தில் இருந்தனர். நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 21 செ.மீ., மழை பதிவானது. இது, தற்போதைய தென்மேற்கு பருவ மழை காலத்தில் மிகக் கூடுதலாக பெய்த மழை . மூணாறில் கொட்டிய மழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், தாவரவியல் பூங்கா அருகே பழைய அரசு கல்லுாரி பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது.
அப்போது, அந்த வழியாக மூணாறை நோக்கி சென்ற மினி லாரி மீது மண் சரிந்து விழுந்தது. இதில், லாரி 300 அடி துாரம் பள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதில், மூணாறு அந்தோணியார் காலனி லாரி டிரைவர் கணேசன், 58, உயிரிழந்தார்; உதவியாளர் முருகன், 50, பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
நேற்று காலை 8:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
மலை மேலிருந்து பெயர்ந்து வந்த மண், கற்கள் தாவரவியல் பூங்காவில் குவிந்தன.
பழைய மூணாறு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலையோரத்தில் இருந்த நான்கு கடைகள் சேதமடைந்தன.
மாட்டுபட்டி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் அணை திறக்க வாய்ப்புள்ளது.
மாவட்ட நிர்வாகம் 'ரெட் அலெர்ட்' விடுத்து, முதிரைபுழை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்று பகலில் மழை சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.