/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பு பற்றி விபரம் அளித்தால் பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பு பற்றி விபரம் அளித்தால் பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பு பற்றி விபரம் அளித்தால் பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பு பற்றி விபரம் அளித்தால் பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஜன 20, 2024 05:35 AM

தேனி: நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பது பற்றி விவசாயிகள் விபரங்கள் தெரிவித்தால் வடிகால் தொழில்நுட்ப அமைப்பு ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.', என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் பன்னீர் செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பாண்டியன், தலைவர், மாவட்ட விவசாயிகள் சங்கம்: மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் கூடலுார் முதல் கெங்குவார்பட்டி வரை 25 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடியாகிறது. ஒரு மரத்தில் 2 டன் பழங்கள் காய்க்கிறது. ஆனால் 10 ஆண்டுகளாக மா பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்துகிறோம். கட்டடம் கட்டிய பின் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டனர். அதில் எவ்வளவு திறன் தயாரிக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்க வேண்டும்.
கலெக்டர்: 10 டன் தயாரிக்கும் திறன் கொண்டது. தொண்டு நிறுவனம் என நீங்கள் கூறுவது தவறு. உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாம்பழக்கூழ் தயாரிப்பிற்கான 10 டன் மாம்பழங்கள் கூட விவசாயிகள் தருவது இல்லை. நீங்கள் தந்தால் நான் உற்பத்தி செய்ய உத்தரவிட தயாராக உள்ளேன்.
மூக்கையா, ஊத்தாங்கரை, விவசாயி: ஊத்தாங்கரை பகுதிக்கு சோலார் தொழில்நுட்பத்திலான சோலார் மின்விளக்குகள் 700 அமைக்க நிதி ஒதுக்கி 400 விளக்குகள் மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளன. மீதி விளக்குகள் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். நிலுவையில் உள்ள சோலார் விளக்குகள் பொறுத்தவும், பழுதடைந்தவைகளை சீரமைக்கவும் வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
குமார்நேரு, பாலகோம்பை: செங்கல் சூளைகள் வருகையால் வேளாண் சாகுபடி பாதிப்பு, இயற்கை அழிவு, அரசாங்கத்திற்கு பொருள் இழப்பு, கனிம வளம் கொள்ளை போகின்றன. இதனை தவிர்க்கவும் மண் வளம், சூழல் வளம் காக்க செங்கல் சூளைகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நான் கடந்த ஆண்டில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் நடவடிக்கை தேவை.
கலெக்டர்: உரிமம் பெற்றவர்கள், பெறாதவர்கள் நடத்துகிறார்களா என ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
ராசு, மயிலாடும்பாறை: இம்முறை அதிக மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நீராதாரங்களில் கழிவுநீர், மனித கழிவுகள் ஆங்காங்கு கலக்கின்றன. நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை அணை நீர்த்தேக்கம்,ஆற்றுப்பகுதியில் சேரும் வண்டல் மண் துார்வாரி விவசாயிகளுக்கு வழங்கலாம்.
கலெக்டர்: வைகை அணை துார்வாரும் பணிகுறித்து ஏற்கனவே பரிந்துரை அனுப்பியுள்ளோம். உத்தரவு கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட முழுவதும் நீராதாரங்கள் வடிகால் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுகிறது. கழிவுநீர் வடிகால் மூலம் சுத்திகரிக்கப்பட்டு மண் வளம் கெடாமல் பாதுகாக்க மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் பாதிப்படைந்த நீராதாரங்கள் குறித்து விபரங்கள் அளித்தால், முறைப்படி பாதுகாக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இளங்கோ, தேனி: பட்டுக்கூடு சந்தைப்படுத்தும் போது தேனி சந்தைக்கும், கோயம்பத்துாருக்கும் கிலோவிற்கு ரூ.100 வித்தியாசம் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
கலெக்டர்: தமிழகம் முழுவதும் பட்டுக்கூடு விற்பனைக்கான ஒருங்கிணைந்த மின்னனு ஏல விற்பனை, வரும் ஏப்ரலில் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் மல்பெரி விவசாயிகள் பட்டுக்கூடு விற்பனையில் நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.'என்றார்.