/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது
/
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது
ADDED : நவ 04, 2024 03:55 AM

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்தடுத்து தொடர் கன மழை பெய்வதால் வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். 2023 டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அதிகபட்சமாக 70 அடி வரை உயர்ந்தது. (அணை உயரம் 71 அடி.)
அணையில் இருப்பில் இருந்த நீர் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டதால் அணை நீர்மட்டம் ஜூன் 1ல் 47.54 அடியாக குறைந்தது. மழை துவங்காததால் நீர் வரத்து வினாடிக்கு 14 கன அடி மட்டுமே இருந்தது. பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஜூலை 3 ல் 51.71 அடியாக உயர்ந்தது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் அணையில் நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ஜூலை 15ல் மதுரை, திண்டுக்கல் பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக நிலங்களுக்கும் அணையிலிருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கான நீர் வரத்து, அணையின் நீர் வெளியேற்றம் சமன் செய்யப்பட்டதால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது. அக்.,30ல் அணை நீர்மட்டம் 59.40 அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை தொடர்வதால் நீர் வரத்து வினாடிக்கு 1722 கன அடி வரை உயர்ந்து, நீர்மட்டமும் நேற்று 62.30 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 3 அடி வரை உயர்ந்துள்ளது.
தற்போது அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் மட்டும் வெளியேறுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைக்கான சூழல் தொடர்வதால் இந்த ஆண்டும் அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடியை எட்டும் வாய்ப்புள்ளதாக வைகை அணை நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.