/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டி பட்டியில் இறவை பாசனப் பரப்பளவு அதிகரிப்பு; நிலத்தடி நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஆண்டி பட்டியில் இறவை பாசனப் பரப்பளவு அதிகரிப்பு; நிலத்தடி நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டி பட்டியில் இறவை பாசனப் பரப்பளவு அதிகரிப்பு; நிலத்தடி நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டி பட்டியில் இறவை பாசனப் பரப்பளவு அதிகரிப்பு; நிலத்தடி நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 21, 2024 08:20 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஆண்டை விட தற்போது இறவை பாசன பரப்பு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் இந்த ஆண்டு கோடையிலும் பாதிப்பு இன்றி விவசாயத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களும், நிலத்தடி நீரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் இறவை பாசன விவசாயமும் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள நிலங்களில் மட்டும் ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. இக் கிராமங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் நெல்,வாழை சாகுபடியும், அதனைத் தொடர்ந்து காய்கறிகள் சாகுபடியும் தொடரும்.
கடந்த இரு ஆண்டுகளாக தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை கை கொடுத்துள்ளதால் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி தற்போது ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மறவபட்டி, மணியாரம்பட்டி, வரதராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நடப்பு பருவத்தில் நெல் சாகுபடியை துவக்கி உள்ளனர்.
ஜம்புலிப்புத்தூர், ரங்கசமுத்திரம், கோவில்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், சண்முகசுந்தரபுரம், மொட்டனூத்து பகுதியில் மக்காச்சோளம் விதைப்பு அதிகரித்துள்ளது. தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, மறவபட்டி, கணேசபுரம் கிராமங்களில் நடப்புப் பருவத்தில் நிலக்கடலை விதைப்பும் அதிகரித்துள்ளது.ஆண்டிபட்டி வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: கடந்த ஆண்டில் டிசம்பர் முடிய 404 எக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு இந்த ஆண்டில் டிசம்பர் வரை 450 எக்டேராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1443 எக்டேராக இருந்த மக்காச்சோளம் சாகுபடி பரப்பு தற்போது 1706 எக்டேராக உயர்ந்துள்ளது. இதே போல் கடந்தாண்டு 433 எக்டேர் பரப்பில் இருந்த நிலக்கடலை சாகுபடி தற்போது 450 எக்டேர் வரை உயர்ந்துள்ளது. தற்போது நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றிற்கு உரிய விலையும் கிடைக்கிறது. நடப்பு பருவம் ஆண்டிபட்டி பகுதியில் இறவை பாசன விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

