/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெறுவோர் அதிகரிப்பு; பிற கடன்கள் வழங்க முடியாமல் சங்க நிர்வாகம் திணறல்

ADDED : ஜூலை 31, 2025 05:39 AM

மாவட்டத்தில் 80 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, நகர கூட்டுறவு வங்கிகள் 2 இயங்குகின்றன. இந்த சங்கங்கள் மூலம் பயிர்கடன், கால்நடை வாங்க கடன், வீட்டு கடன், தொழில்கடன் என பல்வேறு வகையான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் குறிப்பிட்ட வட்டியில் பணம் பெறுகின்றனர். அந்த வட்டியை விட குறைந்த சதவீதம் லாபமாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன.
ஆனால், கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் புதிதாக பயிர்கடன், கால்நடை கடன் கேட்டு செல்லும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது சில சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த 4 மாதங்களில் 5 பவுன் தங்க நகைக்கு குறைவாக அடகு வைக்க கூட்டுறவு சங்கங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.
இதுபற்றி கூட்டுறவு துறையினர் கூறுகையில், ' தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் முழுவதும் திருப்பினால் தான் மறு அடகு வைக்க முடியும். ஆனால், கூட்டுறவு சங்கங்களில் வட்டி தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வசதி உள்ளதால் சங்கங்களில் அடகு வைக்க அதிகம் வருகின்றனர். மற்றொருபுறம் தேர்தல் நெருங்குவதால் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என்ற ஒரு நம்பிக்கையில் பலரும் 5 பவுன் நகைக்கு குறைவாக அடகு வைக்க துவங்கி உள்ளனர். இதனால் பிற கடன் வழங்க ஒதுக்கப்பட்ட தொகையும் நகைக்கடன்களுக்கு வழங்கும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சில நாட்களில் பிற கடன்கள் வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. மேலும்
சில கூட்டுறவு சங்கங்களில் ரூ.1.50 கோடி முதல் ரூ.2 கோடி வரை வாராக்கடன்கள் உள்ளன. இது போன்ற கடன் சங்கங்களில் முன்பு கடன் வாங்கி திருப்பி செலுத்தியவர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறது,' என்றனர்.