/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
/
ஆண்டிபட்டியில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
ஆண்டிபட்டியில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
ஆண்டிபட்டியில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
ADDED : செப் 21, 2024 06:12 AM
ஆண்டிபட்டி: நடப்பு ஆண்டில் பெய்த கோடை மழை, தென்மேற்கு பருவ மழையால் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இறவை பாசன கிணறுகள், போர்வெல்களில் போதிய நீர் இருப்பதால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகாவில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளன ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் மழையை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் சிறு தானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்கின்றனர். இறவை பாசன நிலங்களில் இரண்டு அல்லது மூன்று போகமாக நெல், வாழை, கரும்பு, காய்கறி சாகுபடி செய்கின்றனர். வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள குன்னூர், அம்மச்சியாபுரம், அரப்படித்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பு சில மாதங்கள் தொடர்ந்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. மழையால் குன்னூர் கருங்குளம், செங்குளம் கண்மாய், மரிக்குண்டு கோடாங்கி நாயக்கர் கண்மாய், பாலசமுத்திரம், ரெங்கசமுத்திரம் உட்பட பல கண்மாய்களில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கிய நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. நடப்பு பருவத்தில் இறவை பாசன நிலங்களில் தற்போது விவசாயிகள் காய்கறிகளில் வெண்டை, கத்தரி, தக்காளி, வெங்காயம் அதிகம் சாகுபடி அதிகம் செய்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையை நம்பி நெல் நடவுக்காக பல ஏக்கர் நிலங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தற்போதுள்ள நிலத்தடி நீர் ஆதாரமே இன்னும் சில மாதங்களுக்கு கை கொடுக்கும். புரட்டாசியில் துவங்கும் மழை கார்த்திகை, மார்கழி வரை அடுத்தடுத்து தொடரும் வாய்ப்புள்ளது. எனவே நடப்பு ஆண்டில் இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் நடவு செய்தாலும் நீர் பற்றாக்குறைவால் பாதிப்புக்கு வாய்ப்பில்லை என்றனர்.