/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு மாநில எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அவசியம்! இடம் தேர்வு செய்தும் கிடப்பில் போடப்பட்ட அவலம்

ADDED : ஆக 17, 2024 01:26 AM
போடி : தமிழகம், கேரளா இரு மாநில எல்லையில் கடத்தலை தடுக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைப்பது அவசியம். இத் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டத்தில் இருந்து போடி முந்தல் செக் போஸ்ட் வழியாக கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் துறைக்கும், ஏலக்காய், மிளகு உள்ளிட்ட வாசனை பொருட்கள் கடத்தலை தடுக்க வணிகவரித்துறைக்கும், மது, கஞ்சா, ஸ்பிரீட் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மதுவிலக்கு பிரிவிற்கும், மரக்கடத்தலை தடுக்க வனத்துறைக்கும், பறவை காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து சோதனை சாவடி அமைக்கவும், அதில் அரசு பணியாளர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இத் திட்டத்தை செயல்படுத்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடி அருகே முந்தலில் 26 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை முன்னாள் கலெக்டர் முரளீதரன், முன்னாள் எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்கரே, வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இது போல குமுளியிலும் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. இருமாநில எல்லைகளில் கடத்தலை தடுக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைப்பதற்காக எவ்வித நடவடிக்கை எடுக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் கடத்தல், சமூக விரோத செயல்கள் அதிகரித்து உள்ளன.
கடத்தல், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைப்பதற்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.