/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்நிலை கரை ஓரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க; மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
/
நீர்நிலை கரை ஓரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க; மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
நீர்நிலை கரை ஓரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க; மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
நீர்நிலை கரை ஓரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க; மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
ADDED : அக் 27, 2024 04:58 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், கண்மாய், வாய்க்கால் உள்ளிட்டவற்றின் கரைகளின் உறுதித்தன்மையை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் முல்லை பெரியாறு, மூல வைகை, மஞ்சளாறு, வராகநதி, வறட்டாறு, கொட்டக்குடி ஆறு என முக்கிய ஆறுகள், 122 கண்மாய்கள், குளங்கள் உள்ளன. இவை பெரியாறு நீர்வளக்கோட்டம், மஞ்சளாறு நீர்வளக்கோட்டம் சார்பிலும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் பராமரிப்பில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் பராமரிப்பு பணி பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது.
அதே நேரத்தில் சில ஆறுகள், குளங்கள், கண்மாய்களில் வேளாண் மற்றும் பிற பயன்பாட்டிற்காக மண் அள்ளப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் கரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. அதிக நீர் நிறைந்து உள்ளபோது கரைகள் சேதமடைந்திருந்தால் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு முன் ஆண்டிபட்டியில் பொம்முகுளம் கரைகள் சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது குறிப்பிடதக்கது. இதனால், நீர்நிலைகள் பகுதிகளில் கரைகள் உறுதியை நீர்வளத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். மேலும் குளங்கள், கண்மாய்களில் கரைகள் சேதமடைந்திருப்பின் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் ஆண்டு தோறும் நீர்நிலைகளில் மூழ்கி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கும் பள்ளி,கல்லுாரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை அதிகப்படுத்த மாவட்டநிர்வாகம், பள்ளிகல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.