/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை கரையோர கிராமங்களில் நெல்,வாழை நடவில் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
வைகை கரையோர கிராமங்களில் நெல்,வாழை நடவில் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை கரையோர கிராமங்களில் நெல்,வாழை நடவில் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை கரையோர கிராமங்களில் நெல்,வாழை நடவில் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 11, 2024 05:36 AM
ஆண்டிபட்டி: வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் போதுமான அளவு இருப்பதால் விவசாயிகள் நெல், வாழை நடவு செய்வதற்கான பணிகளை துவக்கி உள்ளனர்.
ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர் அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி ஆகிய கிராமங்கள் மூல வைகை ஆற்றின் கரைகளிலும், ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, டி.புதூர், வேகவதி ஆசிரமம், குண்டலபட்டி, புள்ளிமான்கோம்பை ஆகிய கிராமங்கள் வைகை ஆற்றின் கரைகளிலும் உள்ளன.
வடகிழக்கு பருவ மழையால் மூல வைகை ஆற்றில் வரும் நீர் வரத்தால் அப்பகுதி விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக திறக்கப்படும் நீரால் கரையோரங்களில் உள்ள விளை நிலங்களிலும் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து பெய்துவரும் மழையால் கிணறுகள், போர்வெல்களில் போதிய அளவு நீர் சுரப்பு கிடைப்பதால் தண்ணீர் பற்றாக்குறை இன்றி விவசாயத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றின் கரையோர நிலங்களில் மூன்று போகத்திற்கான வாய்ப்புகள் இருந்தாலும் இரு போக விவசாயத்தை ஆண்டு முழுவதும் தொடர்கின்றனர். கடந்த முறை சாகுபடி செய்யப்பட்ட காய்கறி பயிர்கள் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இப்பகுதியில் நெல் நடவில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
மழையை பயன்படுத்தி உழவு செய்த நிலங்களில் தக்கபூடு, சணம்பு போன்ற பசுந்தாள் செடிகளை வளர்த்து அடியுரமாக்க தயார் நிலையில் வைத்துள்ளனர். விவசாயிகள் பலர் நெல் நாற்றுகள் விளைவிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
வைகை ஆற்றில் கரையோர கிராம நிலங்களில் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ் போன்ற காய்கறி பயிர்கள் அதிகம் சாகுபடி இருக்கும். காய்கறி சாகுபடியில் விலை ஏற்ற இறக்கத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது நெல்லுக்கான விலை குவிண்டால் ரூ.2300க்கும் அதிகமாக கிடைக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த முறை நெல் நடுவில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் முழு வீச்சில் துவங்கும் இவ்வாறு கூறினர்.