/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊசி மலைக்கண்மாயில் நீர் தேங்காததால் பாசனம் பாதிப்பு பாலக்கோம்பையில் மண்வளம் இருந்தும் நீர்வளம் இன்றி தவிப்பு
/
ஊசி மலைக்கண்மாயில் நீர் தேங்காததால் பாசனம் பாதிப்பு பாலக்கோம்பையில் மண்வளம் இருந்தும் நீர்வளம் இன்றி தவிப்பு
ஊசி மலைக்கண்மாயில் நீர் தேங்காததால் பாசனம் பாதிப்பு பாலக்கோம்பையில் மண்வளம் இருந்தும் நீர்வளம் இன்றி தவிப்பு
ஊசி மலைக்கண்மாயில் நீர் தேங்காததால் பாசனம் பாதிப்பு பாலக்கோம்பையில் மண்வளம் இருந்தும் நீர்வளம் இன்றி தவிப்பு
ADDED : டிச 11, 2025 06:23 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், பாலக்கோம்பை ஊசிமலைக் கண்மாயில் நீர் தேங்காததால் இப்பகுதியில் இறவை பாசன அளவு குறைந்து விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சிமலை வேலப்பர்கோயில் அருகே மலை அடிவாரத்தில் உள்ளது பாலக்கோம்பை கிராமம். மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரை இங்குள்ள கண்மாயில் தேக்கி பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக கண்மாய்க்கு போதுமான நீர் வரத்து இல்லை.
கண்மாயில் நீர் தேங்காததால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து, இறவை பாசன அளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இதனால் பலரும் விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழில் தேடி செல்கின்றனர். மண் வளம் இருந்தும் நீர் வளம் இன்றி பலரும் தவிக்கின்றனர். விவசாயத் தொழில் நசிந்து போவதால் அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதிப்படைகிறது.
இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
திசைமாறி செல்கிறதா மழைநீர் குருசாமி, பாலக்கோம்பை: 15 ஏக்கர் பரப்பில் நீர் தேங்கும் இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைக்கல், கத்திக்கல், வடுவூத்து, கன்னிமார் அம்மன் முடங்கி, அருகு வெளி பகுதிகளில் இருந்து ஓடை வழியாக மழைக்காலத்தில் நீர் வந்து சேரும்.
கடந்த காலங்களில் கண்மாயில் தேங்கிய நீரை பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி பாசனம் செய்தனர். பல ஆண்டுகளாக கண்மாய்க்கு போதுமான அளவு மழைநீர் கிடைக்கவில்லை. மழை குறைந்ததா அல்லது கண்மாய்க்கு வரவேண்டிய நீர் திசை மாறி செல்கிறதா என தெரியவில்லை.
கண்மாயில் நீர் தேங்கினால் பாலக்கோம்பையை சார்ந்துள்ள விவசாய நிலங்களில் மூன்று போகம் எடுக்க முடியும். தற்போது நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு குறைந்து விட்டது. ஆண்டு முழுவதும் விவசாயத்தை தொடர முடியவில்லை. மூலவைகை ஆறு அல்லது குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்ட கண்மாய்களில் தேக்குவதற்கு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இத்திட்டம் நிறைவேறினால் மட்டுமே ஆண்டிபட்டி பகுதியில் நசிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க முடியும்.
பராமரிப்பு இல்லாத கண்மாய் காளியம்மாள், பாலக்கோம்பை: மலைப்பகுதியில் உள்ள ஓவம்பாறை, கரும்பாறை சப்பாணிச்சுனை பகுதிகளில் இருந்து வரும் நீர் கண்மாய்க்கு செல்வதில்லை.
இந்த நீர் கீழ்பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு சென்றடைகிறது. இதனால் பாலக்கோம்பை கண்மாய் பாதிப்படைகிறது. கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் பராமரிப்பும் செய்வதில்லை. 300 ஏக்கரில் நேரடி பாசனம் இருந்தது. கண்மாய்க்கான மடை சேதம் அடைந்துள்ளது. கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கு வேறு வழி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் முழு அளவில் நீர் தேங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்ததால் இப்பகுதியில் காய்கறிகள் விளைச்சலும் குறைந்து வாழ்வாதாரம் பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

